சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை எழுந்த நிலையில் கடந்த திமுக ஆட்சியில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் விஜய் தலைமையிலான தவெக அரசு பரந்தூர் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்தது.
தற்போது பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த கௌதமன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ஆண்டுக்கு லட்சக்கணக்கான பயணிகள் வந்துபோகும் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இட நெருக்கடி நிலவுகிறது. இதனை சமாளிக்க 27 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

ஏற்கனவே புதிய விமான நிலையம் அமைக்க பன்னூர், திருப்போரூர், படாலம் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்து இறுதியில் தான் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது, 2,325 ஹெக்டேர் பரப்பில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க, 1527 ஹெக்டர் தனியார் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு 2023 ஆம் ஆண்டு அனுமதி வழங்கியதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் 798 ஹெக்டேர் அரசு நிலம் வகை மாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டது. பின்னர் 1700 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு 680 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. விமான நிலையம் அமைக்க, 48 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசு, இந்த திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளது என மனுவில் கூறியுள்ளார்.
விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி முதலமைச்சர் விஜய் இத்திட்டத்தை கைவிடுவதாக கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டார் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. எந்தவித தொழில்நுட்ப புள்ளி விவரங்களும் இல்லாமல், நிபுணர் குழுவின் அறிக்கைகள் இல்லாமல், பொருளாதார ஆய்வுகள் ஏதும் நடத்தாமல் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டது தொடர்பான முதலமைச்சரின் அறிவிப்பை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும், கையகப்படுத்தப்பட்ட நிலத்தை மீண்டும் உரிமையாளர்களுக்கு வழங்க தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பரந்தூர் விமான நிலைய திட்டம் கடந்த திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட போதே அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தவெக தலைவராக இருந்த விஜய் , போராட்டக்காரர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜய் அரசு அமைந்து பரந்தூர் திட்டத்தை கைவிட்டது, மேலும் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்க இடம் தேடி வருகிறது.


Click it and Unblock the Notifications

