நாடு முழுவதும் வரும் 15ஆம் தேதி முதல் 2000 ரூபாய்க்கு மேல் உள்ள குறிப்பிட்ட யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இதற்கு பல மாநிலங்களை சேர்ந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
2,000 ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட யூபிஐ பரிவர்த்தனைகள் மூலம் பெட்ரோல் பங்க்களில் பெட்ரோல் நிரப்பினால் நிலையான கட்டணமாக 5 ரூபாய் எம்டிஆர் (Merchant Discount Rate - MDR) வசூலிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்த தொகையை தாங்கள் ஏற்க முடியாது என்றும், 2,000 ரூபாய்க்கு மேற்பட்ட யூபிஐ பண பரிவர்த்தனைகளை பெறுவதை நிறுத்த போவதாகவும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர்.

டெல்லி-என்சிஆர், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த பெட்ரோல் பங்க் டீலர்கள் இந்த விவகாரம் தொடர்பாக தங்களது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
NPCI வெளியிட்ட விளக்கத்தின் படி, பெட்ரோல் பங்க்குகளில் 2,000 ரூபாய்க்கு மேற்பட்ட யூபிஐ பண பரிவர்த்தனைகளுக்கு நிலையான 5 ரூபாஉ எம்டிஆர் கட்டணம் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், 2,000 ரூபாய்க்கு குறைவான பரிவர்த்தனைகளுக்கு எவ்வித கட்டணமும் கிடையாது. கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்துவோர் பெரும்பாலும் 2000 ரூபாய்க்கு மேல் தான் பெட்ரோல் போடுவார்கள். இதில் பெட்ரோல் பங்க் சார்பாக 5 ரூபாய் கட்டணம் என்பதை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளனர்.
தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மூலம் டீலர்களுக்கு கிடைக்கும் லாபம் ஒரு லிட்டருக்கு தோராயமாக 2.40 முதல் 3.40 ரூபாய் வரை மட்டுமே உள்ளது என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கூறுகின்றனர். அகில இந்திய பெட்ரோலிய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் மான்டி சேகல் , எரிபொருள் சில்லறை விற்பனையாளர்களுக்கு இந்த எம்டிஆர் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படவில்லை என்றால், பெட்ரோல் பங்குகளில் 2,000 ரூபாய்க்கு மேற்பட்ட யூபிஐ பண பரிவர்த்தனைகளை ஏற்பதை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என கூறியுள்ளார்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்கின்றன.இந்நிலையில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கான கட்டணங்களை ஈடுகட்ட டீலர்களால் பெட்ரோல், டீசல் விலையை தாங்களாகவே உயர்த்த முடியாது என அகில கர்நாடக பெட்ரோலிய வர்த்தகர்கள் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த டீலர் ஹேமந்த் சிரோஹி அதிகாரப்பூர்வ யூபிஐ பரிவர்த்தனை தரவுகளின்படி, நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகள் கூட்டாக சுமார் 23.9 மில்லியன் யூபிஐ பரிவர்த்தனைகளை கையாளுகின்றன என்றும், அவற்றின் மதிப்பு 1,573 கோடி ரூபாய் என்றும் தெரிவித்துள்ளார். இதில் சுமார் 20 சதவீத பரிவர்த்தனைகள் 2,000 ரூபாய்க்கு மேல் இருக்கக்கூடும் என்கிறார்.இந்த புதிய எம்டிஆர் கட்டணம் காரணமாக ஒரு தனிப்பட்ட பெட்ரோல் பங்க்கிற்கு தினசரி தோராயமாக 230 முதல் 250 ரூபாய் வரை கூடுதல் நிதி சுமை ஏற்படும் என அவர் கூறியுள்ளார்.
அகில இந்திய பெட்ரோலிய டீலர்கள் சங்கம் மற்றும் பிற அமைப்புகள், பெட்ரோல் மற்றும் டீசல் என்பவை அத்தியாவசிய பொருட்கள் என்றும், பெட்ரோல் நிலையங்களில் 2,000 ரூபாய்க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகள் மிகவும் வழக்கமானவை என்றும் கூறுகின்றன. எனவே, எரிபொருள் நிலையங்களுக்கு யூபிஐ எம்டிஆர் கட்டணத்திலிருந்து முழுமையான விலக்கு அளிக்க வேண்டும் என கோரி மத்திய நிதியமைச்சருக்கு கடிதம் அனுப்ப்யுள்ளனர்.
ஏப்ரல் 2026 நிலவரப்படி, இந்தியாவில் மொத்தம் 1,03,023 பெட்ரோல் பங்குகள் உள்ளன. இதில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகள் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களால் இயக்கப்படுபவை. மற்றவை ஜியோ மற்றும் நயாரா எனர்ஜி போன்ற தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமானவை.


Click it and Unblock the Notifications


