இந்தியாவின் மெகா கோடீஸ்வரரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவருமான முகேஷ் அம்பானி சமீபத்தில் மும்பையில் பந்த்ரா குர்லா வளாகத்தில் 7.5 லட்சம் சதுர அடி பரப்பில் தனது அல்ட்ரா சொகுசு மால் ஜியோ வேர்ல்டு பிளாசாவை தொடங்கினார்.
இதன் மூலம் பிரீமியம் ஆடம்பர மால் வளாக வர்த்தகத்தில் களம் இறங்கியுள்ளார். அம்பானிக்கு இந்த துறை கத்துக்குட்டி, அதேவேளையில் இந்த பிரிவில் பழம் தின்னு கொட்டை போட்ட பெரிய ஜாம்பவான் ஒருவர் இருக்கிறார், அவர் தான் பீனிக்ஸ் மில்ஸ் நிறுவனத்தின் தலைவர் அதுல் ருயா.

முகேஷ் அம்பானியின் ஜியோ வேர்ல்ட் பிளாசாவிலிருந்து சுமார் 30 நிமிட பயண தொலைவில் லோயர் பரேலில் அதுல் ருயாவுக்கு சொந்தமான இந்தியாவின் முதல் பிரீமியம் ஆடம்பர சில்லரை விற்பனை மாலான பீனிக்ஸ் பல்லேடியம் உள்ளது.
பீனிக்ஸ் மில்ஸ் நிறுவனம் தற்போது மால், குடியிருப்பு ரியல் எஸ்டேட் மற்றும் ஹோட்டல் பிரிவுகளில் முன்னணி நிறுவனமாக உள்ளது. ஆனால் இந்நிறுவனம் முதன் முதலில் ஒரு ஜவுளி நிறுவனமாக தொடங்கப்பட்டது. 1905ல் மும்பையில் ராம்நரேன் ருயா என்பவரால் ஜவுளி உற்பத்தி ஆலையாக தொடங்கப்பட்டது.
90களில் பீனிக்ஸ் மில்ஸ் நஷ்டத்தை மட்டுமே சந்தித்தது. மேலும், தொழிலாளர்கள் பிரச்சினை மற்றும் அதிகரித்து வந்த உற்பத்தி செலவுகள் போன்றவற்றால் நிறுவனம் கடும் நெருக்கடியை சந்தித்தது. இந்த சூழ்நிலையில், 1994ல் அதுல் ரூயா தனது குடும்ப வர்த்தகத்தை கையில் எடுத்தார்.
இவர் அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் பள்ளியில் படித்தவர். நலிவடைந்த நிறுவனம் அமைந்திருக்கும் 33 லட்சம் சதுர அடி நிலத்தின் பெரும் மதிப்பை கண்டார்.
பீனிக்ஸ் மில்லை மும்பையின் மிகவும் விரும்பப்பட்ட சில்லறை விற்பனை இடமாக மீண்டும் உருவாக்கினார். 2007ல் வளாகத்தில் ஐந்து நட்சத்திர சொகுசு ஹோட்டலை தொடங்கினார். பீனிக்ஸ் மில்ஸ் இன்று மும்பை, அகமதாபாத், இந்துதூர், லக்னோ, சென்னை, புனே மற்றும் பெங்களூரு ஆகிய 6 நகரங்களில் 8 மால்களை நடத்தி வருகிறது.
பீனிக்ஸ் மில்ஸ வணிகத்தில் செயின்ட் ரெஜிஸ் மும்பை, கோர்டயார்ட மேரியட் ஆக்ரா ஹோட்டல்களும் அடங்கும். பீனிக்ஸ் மில்ஸ் நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.37,000 கோடியாகும்.
அதுல் ருயா பீனிக்ஸ் மில்ஸின் நிர்வாக இயக்குனர் பதவியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். இருப்பினும் நிறுவனத்தின் தலைவராக இருந்து மேற்பார்வை செய்கிறார். உலகம் தரம் வாய்ந்த கலப்பு பயன்பாட்டு ரியல் எஸ்டேட் நிறுவனத்தை உருவாக்குவதை அவரது வணிக மாடலின் நோக்கமாகும். இவர் 2023ல் இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் நுழைந்தார். இவரது சொத்து மதிப்பு ரூ.15,000 கோடியாகும்.


Click it and Unblock the Notifications