பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை வாரணாசிக்கு சென்ற போது, பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் 17வது தவணையை இந்திய விவசாயிகளுக்கு வழங்க உத்தரவிட்டார். இதன் மூலம், 9.26 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி மதிப்பிலான மத்திய அரசின் நிதி உதவியைப் பெற்றனர்.
நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு, முதலும் முக்கிய அறிவிப்பாக இது இருக்கிறது. பிஎம் கிஸ்ஸான் திட்டத்தின் 17வது தவணையை வழங்குவது குறித்து கடந்த வாரமே வெளியிட அனுமதி அளித்ததைத் தொடர்ந்து இதற்கான அறிவிப்பை இன்று வாரணாசிக்கு சென்ற போது அறிவித்தார்.

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டம் உலகின் மிகப்பெரிய நேரடி பயன் திட்டமாக விளங்குகிறது. அதாவது அரசிடம் இருந்து நேரடியாக மக்களுக்கு நிதியுதவி அளிக்கும் உலகின் மிகப்பெரிய திட்டமாக உள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
உயர் வருமானம் கொண்ட விவசாயிகள் போன்ற சில பகுதியினரை நீக்கிவிட்டு, நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளின் நிதி தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் 2019 ஆம் ஆண்டு பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் ஒரு விவசாயிக்கு ரூ.6,000/- நிதி உதவியை மூன்று தவணைகளில் அரசு செலுத்தும் முறை கொண்டு வரப்பட்டது. இந்த தொகை ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை, நேரடி பணப்பரிமாற்ற முறை (DBT) மூலம் நாடு முழுவதும் உள்ள விவசாயக் குடும்பங்களின் வங்கி கணக்குகளுக்கு மத்திய அரசு டெபாசிட் செய்கிறது.
இதுவரை, நாடு முழுவதும் 11 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.3.04 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட தொகை இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த 17வது தவணை வெளியீட்டின் மூலம், இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து விவசாயிகளுககு கொடுக்கப்பட்ட மொத்த தொகை ரூ.3.24 லட்சம் கோடியாகும்.


Click it and Unblock the Notifications