நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேலும் விரைவுபடுத்தும் நோக்கில், ஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்கள் நாளை (செப்.22) முதல் அமலுக்கு வரும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், வணிகம் செய்வதை எளிதாக்குவது, முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் மாநிலங்களின் வளர்ச்சிக்கு சமமான வாய்ப்புகளை வழங்குவதே இந்த சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டம் : ஜிஎஸ்டி சட்டத்தை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டம் என்று வர்ணித்த பிரதமர் மோடி, கடந்த 2017ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டபோது, அது நாட்டின் வரி வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியது என்றார். பல தசாப்தங்களாக, மக்கள் மற்றும் வணிகர்கள் நுழைவு வரி, விற்பனை வரி, கலால் வரி, வாட், சேவை வரி என பல்வேறு வரிகளால் அவதிப்பட்டு வந்தனர்.

ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்திற்கு பொருட்களை அனுப்பும்போது, எண்ணற்ற சோதனைச் சாவடிகள் பெரும் சிக்கலை ஏற்படுத்தின. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு இந்த நிலை மாறியது. இது வரிகளை எளிமைப்படுத்தியது, வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வந்தது, மேலும், வரி ஏய்ப்பை வெகுவாக குறைத்தது.
மேலும், அவர் நாளை முதல் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் என்றும் ஏழைகள், நடுத்தர மக்கள் வர்த்தகத்தினருக்கு ஜிஎஸ்டி சீர்திருத்தம் பயனளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி குறைப்பு நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுக்கும் என்று தெரிவித்த அவர், ஜிஎஸ்டி 2.0 இந்தியாவின் வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தும் என்று கூறியுள்ளார்.
நவராத்திரி நல்வாழ்த்துக்கள் : பிரதமர் மோடி தனது உரையின் தொடக்கத்தில், நாளை தொடங்கும் நவராத்திரி விழாவுக்கு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். நவராத்திரியின் முதல் நாள் முதல், தன்னிறைவு பெற்ற இந்தியாவை நோக்கி நாடு ஒரு முக்கியமான அடியை எடுத்து வைப்பதாகவும், நாளை புதிய தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமலுக்கு வரும் என்றும் அவர் கூறினார். இந்த மாற்றங்கள் கோடிக்கணக்கான இந்திய குடும்பங்களுக்கு பலன் அளிக்கும் என்றும், அவர்களின் சேமிப்பு அதிகரிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications