2020ஆம் ஆண்டில் கொரோனா தொற்று அதிகளவில் பாதிப்பு அடைந்திருந்த நிலையில் சிறப்பான பருவமழை, கிராம் மற்றும் ஊரகப் பகுதிகளில் குறைவான கொரோனா தொற்று பரவல் காரணமாக விவசாய உற்பத்தி பெரிய அளவில் உயர்ந்து ஊரகப் பகுதிகள் மக்களின் வருமானம் அதிகரித்தது.

இதனால் விழாக்கால வர்த்தகத்தின் போது பெரு நகரங்களைக் காட்டிலும் கிராமப்புறத்தில் அதிகளவிலான வர்த்தகம் பதிவானது.
பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் அறிக்கையில் விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் சாதகமான பல சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எதிர்பார்ப்புக்குத் தற்போது டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டமும் முக்கியக் காரணமாக உள்ளது.
இந்நிலையில் இந்திய பூச்சிக்கொல்லி மருந்து உற்பத்தி மற்றும் தயாரிப்பு அமைப்பு விதை, உரம் ஆகிய விவசாயப் பொருட்கள் மீது விதிக்கப்படும் 5 சதவீத ஜிஎஸ்டி வரியைப் போலவே பூச்சிக்கொல்லி மருந்துக்கும் 18 சதவீத ஜிஎஸ்டி வரியில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்க அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேபோல் உள்நாட்டுப் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்பு நிறுவனங்களையும் அதன் வர்த்தகத்தையும் பாதுகாக்க வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பூச்சிக்கொல்லி மருந்து மீது 20 முதல் 30 சதவீதம் வரையில் இறக்குமதி வரி விதிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது PMFAI அமைப்பு.
மேலும் இந்தியாவில் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு நிதியுதவியும், தொழில்நுட்ப உதவிகளையும், சலுகைகளையும் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் அளிக்க வேண்டும் எனக் கோரிக்கையும் விடுத்துள்ளது.
PMFAI அமைப்பின் கீழ் சுமார் 200க்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் பெரும் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளது. இந்த அமைப்பின் கோரிக்கையை நிதியமைச்சகம் ஏற்றுப் பட்ஜெட் அறிக்கையில் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் அறிவிப்புகளை வெளியிடுமா என்பதைப் பிப்ரவரி 1ஆம் தேதி வரையில் காத்திருந்து பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications