இந்திய தொலைக்காட்சி வர்த்தக சந்தையில் முக்கிய நிறுவனமான ஜீ என்டர்டெயின்மென்ட், ஜப்பானின் மிகப்பெரிய பொழுதுபோக்கு நிறுவனமான சோனி குழுமத்தின் இந்திய பிரிவான சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியாவுடன் இணைப்பது தொடர்பாக இரு நிறுவனங்கள் மத்தியில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
2021ல் ஜீ என்டர்டெயின்மென்ட்-சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா இணைப்பு அறிவிப்பு வெளியானது. சந்தை கட்டுப்பாட்டு அமைப்புகளிடம் இருந்து தேவையான அனுமதியும் கிடைத்தது. ஆனால் ஜீ குழும நிறுவனம் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாதது தொடர்பான சட்ட சர்ச்சைகளால் இரு நிறுவனங்களின் இணைப்பு தாமதமானது.

இந்த சூழ்நிலையில், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி கடந்த ஜூன் மாதம் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், நான்கு ஜீ குழும நிறுவனங்களின் இணைப்பு அல்லது இணைப்பின் மூலம் உருவாக்கப்பட்ட எந்தவொரு நிறுவனத்திலும் இயக்குனர்கள் குழுவில் இடம் பெற Essel குழுமத்தின் தலைவர் சுபாஷ் சந்திர கோயங்கா மற்றும் புனித் கோயங்காவுக்கு தடை விதித்தது.
செபியின் விசாரணையில், சந்திராவும் கோயங்காவும் 2019ல் ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் இயக்குனர்கள் பதவியை தங்களுடைய சொந்த நலனுக்காக பயன்படுத்தி நிதியை தவறாக பயன்படுத்தியதை வெளிப்படுத்துகின்றன.
செபியின் உத்தரவை எதிர்த்து செக்யூரிட்டீஸ் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் புனித் கோயங்கா மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த செக்யூரிட்டீஸ் மேல்முறையீட்டு தீர்ப்பாயம், புனித் கோயங்கா ஒராண்டுக்கு நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் வகிக்க தடை விதித்த செபியின் உத்தரவை ரத்து செய்தது.
இதன் எதிரொலியாக மும்பை பங்குச் சந்தையில் ஜீ என்டர்டெயின்மென்ட் பங்கின் விலை 0.54 சதவீதம் உயர்ந்து ரூ.250.45ஆக முடிவடைந்தது. வர்த்தகத்தின் இடையே பங்கின் விலை அதிகபட்சமாக ரூ.258.20 வரை சென்றது.
புனித் கோயங்காவுக்கு ஆதரவாக வந்துள்ள தீர்ப்பால், ஜீ என்டர்டெயின்மென்ட் மற்றும் கல்வர் மேக்ஸ் என்டர்டெயின்மென்ட் (சோனி பிக்சர்ஸ் இந்தியா) ஆகியவற்றுக்கு இடையிலான இணைப்பு நிறைவுக்கு வழி வகுக்கும். அதேசமயம், செக்யூரிட்டீஸ் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் செபி மேல்முறையீடு செய்யலாம்.


Click it and Unblock the Notifications