கோடை காலத்தில் அனலாய் கொதிக்கும் வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க மக்கள் ஏர் கண்டிஷனர் (ஏசி) வாங்குகின்றனர். இதனால் கோடை காலம் வந்துவிட்டாலே ஏசி விற்பனை களை கட்டும். இந்த ஆண்டில் ஏசி விற்பனை சுமார் 25 முதல் 30 சதவீதம் வளர்ச்சி கண்டு 1.40 முதல் 1.50 கோடி ஏசிகள் விற்பனையாகும் என்று இத்துறையை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். ஏசி விற்பனையில் தங்களுக்கு வளமான வர்த்தக வாய்ப்புகள் இருப்பதை உணர்ந்த விரைவு வணிக சேவை தளங்கள் (குயிக் காமர்ஸ்) ஏசி டெலிவரி சேவைக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியுள்ளன. உதாரணமாக விரைவு வணிக தளமான பிளிங்கிட் தற்போது டெல்லி என்சிஆர் பகுதியில் ஏசி டெலிவரியை தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக பிளிங்கிட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அல்பிந்தர் தின்ஷா சமூக வலைதளமான எக்ஸில், ஏசி டெலிவரி செய்யும் சேவைக்காக லாயிட் இந்தியாவுடன் கூட்டு சேர்ந்துள்ளோம். ஏற்கனவே டெல்லி என்சிஆர் பகுதியில் டெலிவரி சேவை தொடங்கப்பட்டு விட்டது. விரைவில் மற்ற நகரங்களில் இந்த சேவை ஆரம்பிக்கப்படும்.

ஏசி டெலிவரி செய்த 24 மணி நேரத்தில் அது நிறுவப்படும் என்று பதிவு செய்து இருந்தார். அண்மையில் அல்பிந்தர் தின்ஷா பேட்டி ஒன்றில், ஏசிகள் மீது நுகர்வோருக்கு வலுவான ஆர்வம் உள்ளது. ஆனால், பெரிய அளவிலான மற்றும் அதிக விலை உயர்ந்த பொருட்களை கையாளுவதில் நிலையான போக்குவரத்து சவால்களை குயிக் காமர்ஸ் நிறுவனங்கள் எதிர்கொள்ளுகின்றன.
கடந்த ஜனவரியில், ஏசி ஒன்றும் ஏதோ ஒன்றும் இல்லை, நம்மால் அதை விற்க முடியும் என்று முடிவு செய்தோம். மார்ச் மாதத்தில் மக்கள் 15,000 முறை ஏசி தொடர்பாக ஆன்லைனில் சர்ச் செய்துள்ளனர் என்று தெரிவித்தார். சோமெட்டாவுக்கு சொந்தமான பிளிங்கிட் நிறுவனம் கடந்த ஆண்டு கூலர்கள் குயிக் டெலிவரி சேவையை தொடங்கியது.
தளது வர்த்தக தளத்தின் சராசரி ஆர்டர் மதிப்பை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை தொடங்கியது. மேலும் குர்கானில் இந்நிறுவனம் ஆப்பிள் தயாரிப்புகள், டிவி, பிரிண்டர்கள், லேப்டாப்கள் மற்றும் விரைவு ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கியது.
ஆன்லைன் வர்த்தக நிறுவனமும், எலக்டரானிக் சில்லரை விற்பனை சங்கிலித்தொடர் நிறுவனமுமான க்ரோமா, ஏசி டெலிவரி காலத்தை ஒருநாளைக்குள் குறைவாக கொண்டு வர தனது சரக்குபோக்குவரத்தை மேம்படுத்தியுள்ளது.
இந்நிறுவனம் கடந்த பிப்ரவரியில் 30 நகரங்களில், ஏசி மற்றும் ஏர் கூலர்களை ஆர்டர் செய்த அதேநாளில் டெலிவரி செய்யும் சேவை அறிமுகம் செய்தது. இது பலத்த வரவேற்பு பெற்றது. ஆன்லைன் வர்த்தக தளமான அமேசான் நிறுவனம், ஏசி மற்றும் இதர எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஆர்டர் செய்த அடுத்த நாள் மற்றும் 48 மணி நேரத்தில் டெலிவரி சேவையை வழங்குகிறது.


Click it and Unblock the Notifications