ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் புதன்கிழமை கத்தார் முதலீட்டு ஆணையத்திற்கு ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் நிறுவனத்திற்கு சுமார் 1 சதவீத பங்குகளை விற்பனை செய்து சுமார் 8,278 கோடி ரூபாய் அளவிலான நிதியை திரட்டியுள்ளது.
ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் பங்குகளை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தில் இருந்து தனியாக பிரித்து பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிலையில், அடுத்தது ரிலையன்ஸ் ரீடைல், ரிலையன்ஸ் ஜியோ ஆகியவை தனித்தனியாக பிரிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் 1 சதவீத பங்குகளை கத்தார் முதலீட்டு ஆணையத்திற்கு 8,278 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தது மூலம் ரிலையன்ஸ் ரீடைல் பிரிவு 8.28 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டை பெற்றுள்ளது. இதன் டிமெர்ஜர்-க்கு முதல் படியாக பலரும் பார்க்கப்பட்டாலும், ரிலையன்ஸ் ரீடைல் தனது கிடங்குகளை விரிவாக்கம் செய்ய முதலீட்டை திரட்டியுள்ளதாக கருத்து நிலவுகிறது.
2020 ஆம் ஆண்டில் கொரோனாவுக்கு மத்தியில் ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் சுமார் 47,265 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை பங்குகள் விற்பனை மூலம் பெற்றது. இப்போது ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் 4.21 லட்சம் கோடி ரூபாய்க்கு மதிப்பிடப்பட்டது, கிட்டதட்ட 3 வருடத்தில் 2 மடங்கு உயர்ந்து 8.28 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டை பெற்றுள்ளது.
ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் கடந்த 3 வருடத்தில் வர்த்தகத்தை மேம்படுத்திய அளவுக்கு இணையாக வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளது. இதன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சாம்ராஜ்ஜியத்தில் அதிக மதிப்புடைய வர்த்தக பிரிவாக ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் உயர்ந்துள்ளது.
ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் இந்தியா முழுவதும் 18500 கடைகள் மற்றும் ஈகாமர்ஸ் தளங்கள் வாயிலாக மளிகை பொருட்கள், உணவு பொருட்கள், குளிர்பானங்கள், எலக்ட்ரானிக்ஸ், பேஷன் மற்றும் லைப்ஸ்டைல், பார்மா என பல பொருட்களை நேரடியாக மக்களிடம் விற்பனை செய்கிறது.
இது மட்டும் அல்லாமல் சமீபத்தில் மெட்ரோ கேஷ் அண்ட் கேரி வர்த்தகத்தை கைப்பற்றியது மூலம் ஹோல்சேல் பிரிவிலும் வர்த்தகத்தை துவங்கியுள்ளது. இந்த அறிவிப்பும் 28ஆம் தேதி நடக்க இருக்கும் ரிலையன்ஸ் வருடாந்திர கூட்டத்தில் முக்கிய அம்சமாக இடம்பெறும்.


Click it and Unblock the Notifications