2000ம் ஆண்டுகளில் பிரபலமாக இருந்த சில்லறை வணிக நிறுவனமான சுபிக்ஷாவின் நிறுவனர் ஆர்.சுப்பிரமணியன் முதலீட்டாளர்களை ஏமாற்றியதற்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐஐடி மற்றும் ஐஐஎம் முன்னாள் மாணவர் ஆர்.சுப்பிரமணியன்.
இவர் மெட்ராஸ் ஐஐடியில் தங்க பதக்கம் வென்ற பொறியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 1991ல் விஸ்வப்பிரியா இந்தியா லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தை தொடங்கினார். இதுதான் அவரின் முதல் வர்த்தக முயற்சி.

1997ல் சில்லரை வணிக சங்கிலித் தொடர் நிறுவனமான சுபிக்ஷாவை தொடங்கினார். கடுமையான பணத் தட்டுப்பாடு காரணமாக 2009ல் சுபிக்ஷா மூடப்பட்டது. விஸ்வப்பிரியா இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் ப்ரைம் முதலீடு, அசர்ட் பேக்கடு செக்யூரிட்டி பாண்ட், லிக்யூட் ப்ளஸ் மற்றும் சேப்டி ப்ளஸ் ஆகிய 4 திட்டங்கள் மூலம் சுப்பிரமணியனும் அவரது கூட்டாளிகளும் மக்களிடம் இருந்து டெபாசிட் திரட்டினர்.
டெபாசிட் முதிர்ச்சி அடைந்தபோது, குறுகிய காலத்தில் ஆதாயம் தரும் திட்டங்களில் மீண்டும் முதலீடு செய்வதாக முதலீட்டாளர்களை ஏமாற்றினர்.
ஒரு கட்டத்தில் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை அறிந்த முதலீட்டாளர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். இதனையடுத்து ஆர்.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
கடந்த 10 வருடங்களாக தானாக முன்வந்து எந்த பணத்தையும் டெபாசிட் செய்யவில்லை என்றும், டெபாசிட் செய்தவர்களுக்கு ரூ.137 கோடிக்கு மேல் திருப்பி செலுத்தவில்லை என்பதையும் நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் ஒப்புக்கொண்டார்.
சென்னை சிறப்பு நீதிமன்றம் கடந்த 20ம் தேதியன்று இந்த வழக்கில் தீா்ப்பளித்தது. முதலீட்டாளர்களை ஏமாற்றியதற்காக சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. மேலும் அவருக்கு ரூ.8.92 கோடி அபராதம் விதித்தது. அதேசமயம் குற்றவாளிகள் அமைப்புகளுக்கு ரூ.191.98 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகையில் ரூ.180 கோடி வைப்புத்தொகை இழப்பீடாக அமைக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பின்படி, இழப்பீடு தொகையானது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்துக்கு மாற்றப்பட வேண்டும். அந்த நிறுவனம் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களின் ஆவணங்களை சரிபார்த்த பிறகு அவற்றை விநியோகிக்கும். தற்போது வரை பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களில் 587 பேர் தங்கள் முதலீட்டை திரும்ப பெறவில்லை என தகவல்.


Click it and Unblock the Notifications