நாட்டின் மிகவும் பிரபலமான சங்கிலித்தொடர் சில்லரை விற்பனை நிறுவனமான டி மார்ட்டின் உரிமையாளர் ராதாகிஷன் தமானி. இவர் சிறந்த பங்குச் சந்தை முதலீட்டாளரும் கூட. சிறந்த முதலீட்டு உத்தி மற்றும் பங்குச் சந்தை நுண்ணறிவு அவரை இந்திய மெகா கோடீஸ்வரர்களில் ஒருவராக ஆக்கியுள்ளது. இந்தியாவின் வாரன் பஃபெட் என்று அழைக்கப்படுபவர்களில் ராதாகிஷன் தமானியும் ஒருவர். தற்போது ராதாகிஷன் தமானியின் போர்ட்போலியாவில் ரூ.1.61 லட்சம் கோடி மதிப்புள்ள 13 நிறுவன பங்குகள் உள்ளன.
பங்குச் சந்தை வட்டாரத்தில் ஒரு முதலீட்டாளர் கூட்டமே ராதாகிஷன் தமானியின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து வருகிறது. அவர் ஒரு பங்கில் முதலீடு செய்கிறார் என்றால் நன்கு ஆராய்ந்த பிறகே முதலீடு செய்வார். எனவே ராதாகிஷன் தமானி முதலீடு செய்யும் பங்கில் நாமும் முதலீடு செய்தால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்று பல முதலீட்டாளர்கள் உள்ளனர். அப்படிப்பட்ட ராதாகிஷன் தமானி கடந்த சில ஆண்டுகளாக 2 மைக்ரோகேப் பங்குகளை விற்காமல் வைத்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த இரண்டு பங்குகள் அத்வானி ஹோட்டல்ஸ் அண்ட் ரிசார்ட்ஸ் (இந்தியா) லிமிடெட் (ஏஎச்ஆர்ஐஎல்) மற்றும் மங்கலம் ஆர்கானிக்ஸ் லிமிடெட் (எம்ஓஎல்). இந்த பங்குகளை சுருக்கமாக கொஞ்சம் பார்ப்போம்.

மங்கலம் ஆர்கானிக்ஸ் லிமிடெட் (எம்ஓஎல்)
1981ல் தொடங்கப்பட்ட மங்கலம் ஆர்கானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் கற்பூரம்,ரெசின் மற்றும் சோடியம் அசிடேட் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. 2020 ஜூன் முதல் ராதாகிஷன் தமானி இந்நிறுவனத்தில் 2.2 சதவீத பங்குகளை வைத்திருக்கிறார். மங்கலம் ஆர்கானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தொடர்ந்து லாபம் சம்பாதிக்கவில்லை மற்றும் பங்கு விலை தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது என்ற போதிலும், ராதாகிஷன் தமானி இந்நிறுவன பங்குகளை தொடர்ந்து வைத்திருப்பது நிறைய கேள்விகளை எழுப்புகிறது.
மங்கலம் ஆர்கானிக்ஸ் நிறுவனம் 2019-20 நிதியாண்டில் நிகர லாபமாக ரூ.48 கோடி ஈட்டியிருந்தது. ஆனால் 2022-23ம் நிதியாண்டில் ரூ.25 கோடி நஷ்டம் ஏற்பட்டது. கடந்த 2023-24ம் நிதியாண்டில் வெறும் ரூ.4 கோடி மட்டுமே லாபம் ஈட்டியிருந்தது. 2022 ஜனவரியில் இப்பங்கின் விலை ரூ.1,200 என்ற அளவில் இருந்தது. ஆனால் அதன் பிறகு தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது. தற்போது இந்நிறுவன பங்கின் விலை ரூ.420 என்ற அளவில் உள்ளது.
அத்வானி ஹோட்டல்ஸ் அண்ட் ரிசார்ட்ஸ் (இந்தியா) லிமிடெட்
1987ல் தொடங்கப்பட்ட அத்வானி ஹோட்டல்ஸ் அண்ட் ரிசார்ட்ஸ் (இந்தியா) லிமிடெட் நிறுவனம் ஆடம்பர ஹோட்டல்களின் வணிகத்தில் உள்ளது. கோவாவின் காரவேலா பீச் ரிசார்ட்டை சொந்தமாக நடத்தி வருகிறது. 2016 மார்ச் முதல் ராதாகிஷன் தமானி இந்நிறுவனத்தில் 4.2 சதவீத பங்குகளை வைத்திருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் வழங்கப்பட்ட டிவிடெண்ட் அடிப்படையில், பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களிலும் சதவீத அடிப்படையில் டாப் 10 டிவிடெண்ட் வழங்கும் நிறுவனங்களில் இந்நிறுவனமும் ஒன்றாகும். 2020 மார்ச்சில் ரூ.24 என்ற அளவில் இருந்த இப்பங்கின் விலை தற்போது ரூ.59.47 என்ற அளவில் உள்ளது.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications