ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒரு இளைஞர் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு பல லட்சம் ரூபாயை மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் தற்போது ஆன்லைன் வாயிலாக நடைபெறக்கூடிய மோசடிகள் நாள்தோறும் புதுப்புது அவதாரத்தில் அரங்கேறுகின்றன. அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தின் பில்வாரா பகுதியை சேர்ந்த 12 ஆவது வகுப்பு முடித்த ஒரு இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தியாவில் கொரோனா காலத்திற்கு பிறகு வீட்டிலிருந்தே பணிபுரியும் நடைமுறை பிரபலமாகி இருக்கிறது.

இந்த நிலையில் போலியாக இணையதளங்களை உருவாக்கிய அந்த இளைஞர் இந்த இணையதளங்களில் வீட்டிலிருந்தே பணிபுரிய ஆள் தேவை எனக் கூறி அவர்களிடம் ஒரு கணிசமான தொகையை பெற்று மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் இவரிடம் பணம் கொடுத்து ஏமாந்து போயிருக்கின்றனர். 18 மாதங்களில் இவர் இவ்வாறு ஆன்லைன் போலியான விளம்பரங்களைத் தந்து மட்டும் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை மோசடி செய்திருக்கிறார்.
காவல்துறையினர் அந்த இளைஞரை கைது செய்து அவருடைய வங்கி இருப்பு விவரங்களை ஆய்வு செய்தபோதுதான் இந்த அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த இளைஞருக்கு எதிராக மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் உத்ராகண்ட் ஆகிய மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அது தவிர இந்த இளைஞரிடம் இருந்து 29 டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள், ஸ்கேனர்கள், பாஸ்புக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பில்வாரா மாவட்டத்தில் சைபர் மோசடிகள் குறித்த புகார் அதிக எண்ணிக்கையில் வந்துள்ளது . இதனை அடுத்து எஸ்.பி தர்மேந்திர சிங் தலைமையிலான ஒரு குழுவினர் ஆபரேஷன் ஆன்டி வைரல் என்ற பெயரில் சைபர் மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கையை தொடங்கினர். இதற்கான ஒரு குழுவை அமைத்து சைபர் மோசடிகளை கண்காணித்து அதில் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து வருகின்றனர்.
அப்பொழுதுதான் அன்மோல் நகரை சேர்ந்த வஹித் ஹுசைன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது சைபர் கிரிமினலான பண்டி பாபா என்பவரிடம் தானும் தன்னை போன்ற பலரும் 2022 ஆம் ஆண்டு சைபர் மோசடியில் ஈடுபடுவது குறித்து பயிற்சி பெற்றதாக கூறினார். இதனை அடுத்து வஹீத் போலியாக சமூக வலைதள பக்கங்களை உருவாக்கி போலியான இணையதளங்கள் பெயரில் விளம்பரம் செய்து வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறி பலரது பணத்தை பறித்துள்ளார்.
இவ்வாறு வேலைக்காக பதிவு செய்பவர்கள் தொடக்கத்தில் 750 ரூபாய் பணமாக செலுத்த வேண்டும் என இவர் கூறுவாராம். அவர்கள் பணம் செலுத்திய பிறகு நாள்தோறும் 1200 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை வருமானமீட்டக்கூடிய வேலை வழங்கப்படும் என கூறுவாரம். இவ்வாறு இவரை நம்பி ஆயிரக்கணக்கான இளைஞர்களும் பெண்களும் பணம் செலுத்தி ஏமாந்து இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications