கோடி கணக்கில் சம்பாதிக்க தொழில் தொடங்கினால் மட்டும் முடியும் என்பதில்லை. நிறுவன உரிமையாளர்களுக்கு வழிகாட்டியாக இருந்தாலும் கோடிக்கணக்கில் சம்பாதிக்க முடியும். இதற்கு உதாரணமாக மறைந்த கல்வியாளரும் முதலீட்டாளருமான ராஜீவ் மோத்வானியை குறிப்பிடலாம்.
ரூ.141 லட்சம் கோடி மதிப்பிலான கூகுள் நிறுவனம் உருவானதன் பின்னணியில் இவரது பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. வாழ்ந்த சிறிது காலத்திலும் சிறந்த கல்வியாளர் மற்றும் நல்ல செல்வம் கொண்ட முதலீட்டாளராகவும் ராஜீவ் மோத்வானி விளங்கினார்.

ஜம்மு காஷ்மீரில் பிறந்தவர் ராஜீவ் மோத்வானி.. ஆனால் வளர்ந்தது எல்லாம் டெல்லி. அந்நகரத்தின் பிரபலமான பள்ளியான செயின்ட் கொலம்பா பள்ளியில் படித்தார். இந்த பள்ளியில்தான் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், பிரபல அரசியல்வாதி ராகுல் காந்தி மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் போன்ற பல பிரபலங்கள் படித்துள்ளனர். நடிகர் ஷாருக்கான் இவரின் பள்ளித்தோழர் என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளி படிப்பை முடித்தவுடன், கான்பூரில் உள்ள புகழ்பெற்ற ஐ.ஐ.டி.யில் கணினி அறிவியலில் பட்டம் பெற்றார். இதனையடுதது மேற்படிப்புக்காக அமெரிக்காவுக்கு பறந்தார். அங்கு பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகததில் பேராசிரியராக பணியாற்றினார். கூகுள் நிறுவனர்களான செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் ஆகியோரின் அதிகாரப்பூர்வமற்ற வழிகாட்டியாக இவர் இருந்தார். அவர்களுக்கு, தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் உதவுவது முதல் நிதி உதவியை கண்டறிவது வரை இவர் முக்கிய பங்காற்றினார்.
கூகுளின் பின்னணியில் மூளையாக இருப்பவர் என்று புகழப்பட்டார். கூகுளின் நிறுவனர்களில் ஒருவரான செர்ஜி பிரின் கூறுகையில், ராஜீவ் மோத்வானி நண்பர் மற்றும் ஆசிரியர். அவரது மரபு மற்றும் ஆளுமை அவர் தொட்ட மாணவர்கள், திட்டங்கள் மற்றும் நிறுவனங்களில் வாழ்கிறது. இன்று நீங்கள் எந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறீர்களோ, அதன் பின்னால் கொஞ்சமாவது ராஜீவ் மோத்வானி இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தெரிவித்தார்.
கூகுள் தவிர, கபூடில், மிமோசா சிஸ்டம்ஸ், பேனோட், அட்கெமி, நியோபாத் நெட்வொர்க்குகள் மற்றும் வுக்லிப் போன்ற நிறுவனங்களின் குழுவிலும் அவர் இடம் பெற்று இருந்தார். செக்வோயா கேபிட்டலின் சிறப்பு ஆலோசகராகவும் இருந்தார். 2001ல் கோடல் பரிசை வென்றார்.
இவருக்கு ஆஷா ஜடேஜா மோத்வானி என்ற மனைவியும், நைத்ரி மற்றும் அன்யா என இரண்டு மகள்களும் உள்ளனர். எவ்வளவு வேகமாக வாழ்க்கையில் புகழை தொட்டாரோ அதை காட்டிலும் அவரது வாழ்க்கை பயணம் விரைவில் முடிவுக்கு வந்தது. 2009ல் அவரது வீட்டில் தற்செயலாக நீரில் மூழ்கி காலமானார். அப்போது அவருக்கு வெறும் 47 வயதுதான்.


Click it and Unblock the Notifications