டாடா குடும்பத்தின் 86 வயதான ரத்தன் டாடா உடல்நலக் குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தி வெளியாகி உள்ளது. டாடா குழுமத்தை வெற்றிகரமாக வழி நடத்தியது மட்டுமின்றி ஒரு மரியாதைக்குரிய தொழிலதிபராகவும் இருந்திருக்கிறார் ரத்தன் டாடா. தனது நிறுவனங்களின் லாபத்திற்கு அப்பால் மக்களின் தேவை என்ன என்பதைத் தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்தவர் இவர். யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் அனைவரும் தங்களுக்கென சொந்தமாக கார் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக இவர் அறிமுகப்படுத்திய டாட்டா இன்டிகாவை மறக்க முடியுமா?
ரத்தன் டாடா டிசம்பர் 28, 1937-ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார். அவர் எட்டாம் வகுப்பு வரை காம்பியன் பள்ளியில் பயின்றார், பின்னர் மும்பையில் உள்ள கதீட்ரல் மற்றும் ஜான் கானான் பள்ளியிலும், சிம்லாவில் உள்ள பிஷப் காட்டன் பள்ளியிலும் படித்தார். அதன் பின்னர் கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலை பயின்றார் மற்றும் 1962-ஆம் ஆண்டில் இந்தியா திரும்புவதற்கு முன்பு லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஜோன்ஸ் மற்றும் எம்மன்ஸ் என்ற கட்டிடக்கலை நிறுவனத்தில் பணியாற்றினார்.

அவர் இந்தியா திரும்பிய பிறகு, டாடா குழுமத்தில் சேர்ந்தார், ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா ஸ்டீல் வணிகத்துடன் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் 1975-ஆம் ஆண்டு ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் மேலாண்மைப் படிப்பை முடித்த இவர் 1991-ஆம் ஆண்டில் டாடா குழுமத்தின் தலைவரானார்.
ரத்தன் டாடா தனது புத்திசாலித்தனம் மற்றும் பணி நெறிமுறைக்காக நன்கு அறியப்பட்டவர். 2022-ஆம் ஆண்டில் அவரது நிகர மதிப்பு ரூ. 3,800 கோடியாக மதிப்பிடப்பட்டது. ஐஐஎஃப்எல் வெல்த் ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் 421-வது இடத்தைப் பிடித்தார், அதற்கும் முந்தைய ஆண்டு ரூ. 3,500 கோடியுடன் 433-வது இடத்தில் இருந்தார். இவருடைய விடா முயற்சிக்கு இது ஒரு உதாரணம்.
டாடா குழுமம் தனது நிறுவனங்களின் ஒட்டுமொத்த வருவாயில் 66 சதவீதத்தை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்குகிறது. ஜூலை 31, 2023-ஆம் ஆண்டு நிலவரப்படி டாடா குழுமம் 29 பொது வர்த்தக நிறுவனங்களை கொண்டுள்ளது. இதன் மொத்த சந்தை மூலதனம் $300 பில்லியன்.
இவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தும் தன்னை எளிமையாகவே காட்டிக் கொண்டார் ரத்தன் டாட்டா. இவருடைய நிர்வாகத்தின் கீழ் டாடா குழுமம் மிகப்பெரிய வெற்றி கண்டது. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பிற முன்னணி சாப்ட்வேர் ஐடி நிறுவனங்களை விட நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாக மாறியுள்ளது. டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ்-இன் ஒரு ஆண்டு லாபம் 60,000 கோடி. சுமார் 135 நாடுகளைச் சேர்ந்த 6 லட்சத்திற்கும் அதிகமானோர் இங்கு பணிபுரிகின்றனர்.
டாட்டா குழுமம் தங்களுடைய லாபம் மட்டும் இன்றி எண்ணற்ற தொண்டு நிறுவனங்களுக்கு உதவியும் செய்து வருகிறது. ரத்தன் டாடாவின் சாதனைகள் மற்றும் பங்களிப்பை கருத்தில் கொண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான பத்மபூஷன் மற்றும் பத்ம விபூஷன் விருதுகளை வழங்கி அரசாங்கம் கௌரவித்துள்ளது. 86 வயதில் காலமான ரத்தன் டாடா இந்த மண்ணை விட்டு சென்றாலும், அவருடைய புகழ் இந்த பூமியை விட்டு என்றும் மறையாது.


Click it and Unblock the Notifications