சாவரின் கோல்டு பாண்டு (Sovereign Gold Bonds - SGB) திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த 2017-18ஆம் நிதியாண்டில் நவம்பர் 6-ஆம் தேதி வழங்கப்பட்ட சாவரின் கோல்டு பாண்டுகள் சீரிஸ்-VI திட்டத்தின் முதிர்வு காலம் நாளையும் (நவம்பர் 6, 2025) நிறைவடைகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்தவர்களுக்கு, 8 ஆண்டுகள் நிறைவில் ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.12,066 என்ற விலையில் தொகை திருப்பி அளிக்கப்படும்.
நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு மிகப் பெரிய லாபம் : இந்த SGB திட்டமானது கடந்த 2017ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டபோது, முதலீட்டாளர்கள் ஒரு கிராம் தங்கத்தை ரூ.2,961 என்ற விலைக்கு வாங்கினர். முதிர்வு விலை தற்போது ரூ.12,066 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், 8 ஆண்டுகளில் முதலீட்டாளர்கள் சுமார் 307% வரை அபரிமிதமான மொத்த வருமானம் ஈட்டியுள்ளனர்.

உண்மையான தங்கத்தை அல்லது தங்க ஈடிஎஃப்களை (Gold ETFs) அதே காலகட்டத்தில் வைத்திருந்ததை விட இந்த மொத்த வருமானம் மிகவும் திருப்தி அளிப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு முக்கியக் காரணம், SGB முதலீட்டாளர்கள் தங்கத்தின் விலை உயர்வினால் மட்டும் லாபம் ஈட்டவில்லை. கூடுதலாக, அவர்கள் தங்கள் ஆரம்ப முதலீட்டுத் தொகைக்கு ஆண்டுக்கு 2.5% வட்டியையும் (அரை வருடத்திற்கு ஒருமுறை) தொடர்ந்து பெற்று வந்துள்ளனர்.
மீட்பு விலை கணக்கீடு எப்படி..?: சாவரின் கோல்டு பாண்டுகளின் இறுதி மீட்பு விலையானது (Redemption Price), சந்தையில் நிலவும் தங்கத்தின் விலையுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி அறிவிப்பின்படி, முதிர்வு தேதிக்கு முந்தைய கடைசி 3 வணிக நாட்களில் இந்திய புல்லியன் மற்றும் ஜூவல்லர்ஸ் அசோசியேஷன் (IBJA) வெளியிட்ட 999 தூய்மை கொண்ட தங்கத்தின் இறுதி விலைகளின் சாதாரண சராசரியை அடிப்படையாகக் கொண்டு இந்த விலை நிர்ணயிக்கப்படுகிறது.
இந்த சீரிஸைப் பொறுத்தவரை, அக்டோபர் 31, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 4, 2025 ஆகிய நாட்களின் சராசரி விலை கணக்கிடப்பட்டு, இறுதி மீட்பு விலையாக ஒரு கிராமுக்கு ரூ.12,066 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. SGB-களின் மொத்த முதிர்வு காலம் 8 ஆண்டுகள் என்றாலும், முதலீட்டாளர்கள் 5ஆண்டுக்குப் பிறகு வட்டி செலுத்தும் நாட்களில் வெளியேறும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும், முழு காலத்திற்கும் முதலீடு செய்தவர்களுக்கு இந்த முறை அதிக லாபம் கிடைத்துள்ளது.
சாவரின் கோல்டு பாண்டுகள் என்றால் என்ன..?: சாவரின் கோல்டு பாண்டு திட்டம், தங்கத்தின் மீதான மோகத்தை குறைத்து, மக்களின் சேமிப்பை நிதிச் சொத்துகளாக மாற்றும் நோக்கத்துடன், மத்திய அரசால் 2015ஆம் ஆண்டு நவம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது. ரிசர்வ் வங்கி, மத்திய அரசு சார்பில் இவற்றை வழங்கியது. தங்கம் கிராமில் மதிப்பிடப்படும் இந்த பாண்டுகள், முதலீட்டாளர்களுக்கு இரண்டு நன்மைகளை வழங்குகிறது.
நிலையான 2.5% வருடாந்திர வட்டி மற்றும் தங்கத்தின் விலை உயர்வுக்கேற்ற மூலதன ஆதாயம். இதனால், இறக்குமதி செய்யப்படும் பௌதீக தங்கத்தின் மீதான சார்பு குறையும் என அரசு நம்பியது. இந்த பாண்டுகளின் மீதான வட்டிக்கு வருமான வரி உண்டு. ஆனால், ஒரு தனிநபர் முதிர்வு காலத்தில் (8 ஆண்டுகளுக்குப் பிறகு) இந்த பாண்டுகளை மீட்டெடுக்கும்போது, அதிலிருந்து கிடைக்கும் மூலதன ஆதாயத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. பாண்டுகளைப் பரிமாற்ற சந்தையில் விற்பதன் மூலம் கிடைக்கும் மூலதன ஆதாயத்திற்கு, குறியீட்டு பலன்கள் பொருந்தும்.


Click it and Unblock the Notifications