2020- 2021 ஆம் நிதியாண்டில் தங்க பத்திர திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் முன்கூட்டியே அவற்றை திரும்ப பெறலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பொதுவாக தங்க பத்திரங்கள் 8 ஆண்டுகள் முதிர்வு காலம் கொண்டவை ஆனால் 5 ஆண்டுகள் முடிந்த உடனே அதனை விற்று பணமாக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
அந்த வகையிக் 2020- 2021 ஆம் நிதியாண்டில் தங்க பத்திர திட்டத்தில் முதல் கட்ட வெளியீட்டில் முதலீடு செய்தவர்கள் தற்போது அவற்றை விற்பனை செய்து பணமாக்கலாம். இவ்வாறு விற்பனை செய்பவர்களிடம் ஒரு யூனிட் அல்லது ஒரு கிராம் தங்கத்திற்கு 9,600 ரூபாய் வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. சர்வதேச அளவிலும் இந்தியாவிலும் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது. கடந்த வாரம் 10 கிராம் தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாய் என்ற மைல்கல்லை கடந்தது.

இந்நிலையில் தான் 2020-21 ஆம் ஆண்டில் தங்க பத்திர திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு ஆண்டுக்கு 2.5 சதவீத வட்டியுடன் தங்கத்தின் விலை உயர்வையும் கணக்கீடு செய்து பார்க்கும்போது ஆண்டுதோறும் சராசரியாக தங்க பத்திரங்கள் மூலம் 18 சதவீதம் லாபம் கிடைத்துள்ளது. 2020 - 21 ஆம் நிதியாண்டில் முதல் கட்டமாக வெளியிடப்பட்ட தங்க பத்திரங்களை வாங்கியவர்கள் ஏப்ரல் 28 ஆம் தேதியிலிருந்து அவற்றை விற்பனை செய்து பணமாக்கிக் கொள்ளலாம்.
பொதுவாக தங்க பத்திரங்களை விற்பனை செய்யும் போது அதற்கு முந்தைய மூன்று வர்த்தக நாட்களில் தங்கத்தின் விலையை சராசரியாக கணக்கீடு செய்து தான் ரிசர்வ் வங்கி ஒரு யூனிட் அல்லது ஒரு கிராம் தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்யும். இதன்படி ஏப்ரல் 23, 24 மற்றும் 25 ஆகிய மூன்று நாட்களிலும் தங்கத்தின் விலை கணக்கீடு செய்து அதன் சராசரியாக தங்க பத்திரங்களை விற்பனை செய்பவர்களுக்கு ஒரு கிராமுக்கு 9,600 ரூபாய் கிடைக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு தான் மத்திய அரசு முதன்முறையாக தங்க பத்திர திட்டங்களை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் கீழ் மக்கள் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் வாயிலாக தங்க பத்திரங்களில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. ரிசர்வ் வங்கி ஆண்டுக்கு நான்கு முறை இந்த தங்க பத்திரங்களை வெளியீடு செய்யும். தங்க பத்திரங்களின் முதிர்வு காலம் எட்டு ஆண்டுகள், 5 ஆண்டுகள் முடிந்த பிறகு மக்கள் எப்பொழுது வேண்டுமானாலும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பத்திரங்களை விற்பனை செய்து பணமாக்கிக் கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இந்த முதலீட்டுக்கு ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டியும் வழங்கப்பட்டதால் ஏராளமானவர்கள் இதில் முதலீடு செய்தனர். 2015 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை அரசு தங்க பத்திர திட்டங்கள் மூலம் 146.96 டன்கள் தங்கத்தை 67 கட்டங்களாக விற்பனை செய்திருக்கிறது. இதன் மூலம் அரசு 72,274 கோடி நிதியாக திரட்டி இருக்கிறது. ஆனால் இதற்கு திரும்ப செலுத்துவதற்கு அரசு பல மடங்கு கூடுதலாக செலவு செய்ய வேண்டி இருக்கிறது . இதன் காரணமாக கடந்த ஓராண்டு காலமாக இந்தியாவில் தங்க பத்திரங்கள் வெளியிடப்படவில்லை, அரசு திட்டத்தை அப்படியே நிறுத்தி வைத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications