சென்னை: இன்று ஒரு தகவல் என்பது போய், இன்று ஒரு மோசடி கதை என்று சொல்லும் அளவிற்கு தினமும் ஒரு மோசடி கதையைப் பற்றி கேள்விப்படுகிறோம். அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருவதால், ஹேக்கர்களுக்கும், மோசடிக்காரர்களுக்கும் மக்களின் பணத்தை பறிப்பது எளிதான ஒன்றாகிவிட்டது. தொடர்ந்து ஆர்பிஐ நமக்கு பல எச்சரிக்கைகளை விடுக்கிறது. ஆனால் ஆர்பிஐ ஊழியரே மோசடி கும்பலில் சிக்கி ரூ. 24.5 லட்சத்தை இழந்துள்ளார். இது எப்படி நடந்தது என்பதைப் விரிவாக பார்ப்போம்.
கன்னிங்ஹாம் சாலைப் பகுதியில் வசிக்கும் 58 வயதான ரிசர்வ் வங்கி ஊழியருக்கு, மே 6ஆம் தேதி மாலை 4.30 மணி அளவில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் பேசிய நபர் தான் லாஜிஸ்டிக்ஸ் கம்பெனியில் இருந்து பேசுவதாகவும், அந்தப் பெண்ணுடைய பெயரில் ஒரு பார்சல் மும்பையில் இருப்பதாகவும், அதில் ஐந்து பாஸ்போர்ட், ஐந்து கிலோ ஆடைகள் மற்றும் கிரெடிட் கார்டுகளுடன் சட்ட விரோத பொருள்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் பேசிக் கொண்டிருந்த நபர், மும்பை போலீசாரிடம் பேசும் படி அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். ஃபோனை வாங்கி பேசிய மற்றொரு நபர் தான் ஒரு மூத்த போலீஸ் அதிகாரி என்று அறிமுகப்படுத்தி, அப்பெண்ணிடம் பேசியுள்ளார். மேலும் வெளிநாட்டிற்கு அனுப்பப்பட்ட பார்சல் அப்பெண்ணின் பெயரில் இருந்ததாகவும், அவருடைய ஆதார் கார்டு அடையாளச் சான்றாக பயன்படுத்தப்பட்டதாகவும், அந்தப் பெண்ணிடம் தெரிவித்துள்ளனர்.
அதனை கேட்டு மிரண்டு போன, அந்தப் பெண், பேசிய நபரிடம் தான் பார்சல் எதுவும் அனுப்பவில்லை என்று கூறியுள்ளார். அந்தப் பெண்ணின் கணக்கு பண மோசடிக்கு பயன்படுத்தப்பட்டதாகவும், பயங்கரவாதிகளுடன் அப்பெண்ணுக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறி மிரட்டி உள்ளனர். இதனால் விசாரணை முடியும் வரை டிஜிட்டல் அர்ரெஸ்ட்-இல் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இது சட்டவிரோத வழக்கு என்று கூறி, அப்பெண்ணை, இந்த விஷயத்தைப் பற்றி யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர்.
அதேபோல பெண்ணின் பேங்க் அக்கவுண்ட்டை வெரிஃபை செய்ய வேண்டும் என்று கூறிய மோசடி கும்பல், அவரிடம் இருந்து பணம் அனுப்பும்படியும் கூறியுள்ளனர். அதைக் கேட்டு அப்பெண்னும், உடனே மே 7ஆம் தேதி அன்று ரூ. 14.2 லட்சத்தையும், அதன் பிறகு ரூ. 5.5 லட்சத்தை இன்னொரு அக்கவுண்டில் இருந்தும், ரூ. 4.8 லட்சத்தை மற்றொரு அக்கவுண்டில் இருந்தும் அனுப்பியுள்ளார்.
ஒட்டுமொத்தமாக ரூ. 24.5 லட்சத்தை வெவ்வேறு அக்கவுண்டில் இருந்து அனுப்பி இருக்கிறார். ஆனால் அதன் பிறகு எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் அந்த நபர்களிடம் இல்லாமல் போனதால், தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்து, அதே நாள் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மோசடி செய்தவர்களின் கணக்கில் உள்ள பணத்தை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இந்திய தண்டனைச் சட்டத்தின் 2 பிரிவுகளில் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications