மத்திய அரசுக்கு வரி வருவாயை தவிர்த்து, பொதுத்துறை நிறுவனங்கள் அளிக்கும் டிவிடெண்ட் வாயிலாகவும் கணிசமான அளவு வருமானம் வருகிறது. குறிப்பாக, நாட்டின் மைய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து ஆண்டுதோறும் லம்பாக ஒரு தொகை மத்திய அரசுக்கு வருகிறது. ரிசர்வ் வங்கி தான் செய்யும் முதலீடுகள் மற்றும் டாலர் இருப்புகளின் மதிப்பீட்டு மாற்றங்கள் மூலம் ஈட்டும் வருவாய் மற்றும் பணத்தை அச்சிடுவதன் மூலம் கிடைக்கும் கட்டணம் ஆகியவற்றில் இருந்து ஒரு தொகையை மத்திய அரசுக்கு வழங்குகிறது. ரிசர்வ் வங்கி தனது உபரி வருவாயில் குறிப்பிட்ட தொகையை தனது மூலதனத்துக்காக ஒதுக்கி வைத்துக் கொள்கிறது. அதேசமயம், தனது உபரி வருவாயில் பெரும் பகுதியை மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி கொடுத்து விடுகிறது.
அந்த வகையில் இந்த நிதியாண்டில் மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி டிவிடெண்டாக ரூ.2 லட்சம் கோடி வரை கொடுக்கும் என நிபுணர்கள் அடித்து கூறுகின்றனர். ரிசர்வ் வங்கிக்கு அன்னிய செலாவணி பரிவர்த்தனைகளிலிருந்து அதிக வருமானம் கிடைத்ததை இதற்கு முக்கிய காரணமாக முன்வைக்கின்றனர்.

இந்த நிதியாண்டில் இரண்டாவது அரையாண்டில் ரிசர்வ் வங்கி ரூபாய் மதிப்பை நிலைப்படுத்த அதிக டாலர்களை விற்பனை செய்தது. குறைந்த விலையில் வாங்கிய டாலரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததால் ரிசர்வ் வங்கிக்கு நல்ல வருமானம் கிடைத்தது.
ஐடிஎஃப்சி பர்ஸ்ட் மதிப்பீடுகளின்படி, 2024 நிதியாண்டில் அன்னிய செலாவணி பரிவர்த்தனைகள் மூலம் ரிசர்வ் வங்கிக்கு ரூ.83,600 கோடி வருமானம் வந்தது. இது 2025 நிதியாண்டில் ரூ.1.85 லட்சம் கோடியாக இருக்கும். எனவே இந்த நிதியாண்டில் ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு டிவிடெண்டாக ரூ.2 லட்சம் கோடி கொடுக்கும்.
அதேசமயம் மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி ரூ.1.5 லட்சம் கோடிதான் கொடுக்கும் என்று குவாண்ட்ஈகோ ரிசர்ச் கணித்துள்ளது. முந்தைய கணிப்பின் போது, ரிசர்வ் வங்கி ரூ.2.1 லட்சம் கோடி கொடுக்கும் என்று இந்நிறுவனம் மதிப்பிட்டு இருந்தது.
பொதுவாக ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு அளிக்கும் டிவிடெண்ட் தொகை மே மாதத்தில் நடக்கும் கூட்டத்தில் ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியத்தால் உறுதி செய்யப்படும். இருப்பினும் மத்திய அரசு தனது பட்ஜெட் கணக்கீட்டிற்கு முன்பே ஒரு தொகையை ரிசர்வ் வங்கி மூலம் கிடைக்கும் என மதிப்பிட்டு இருக்கும். கடந்த நிதியாண்டில் ரிசர்வ் வங்கி இதுவரை இல்லாத அளவுக்கு மத்திய அரசுக்கு டிவிடெண்டாக ரூ.2.1 லட்சம் கோடி அளித்தது குறிப்பிடத்தக்கது.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications