இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. ஆர்பிஐ வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ஜூன் 14ம் தேதி முடிந்த வாரத்திற்கான இந்திய அந்நிய செலாவணி கையிருப்பு 2.922 பில்லியன் டாலர்கள் குறைந்து, 652.895 பில்லியன் டாலர்களாக உள்ளது.
இதற்கு முந்தைய வாரத்தில் அந்நிய செலாவணி கையிருப்பு 4.307 பில்லியன் டாலர்கள் அதிகரித்து, 655.817 பில்லியன் டாலர்கள் என்ற புதிய உச்சத்தை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த வாரத்தில் எதிர்பாராத வகையில் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளது.

அந்நிய செலாவணி கையிருப்பின் முக்கிய பகுதியான வெளிநாட்டு நாணய சொத்துகள், ஜூன் 14ஆம் தேதி முடிந்த வாரத்தில் 2.097 பில்லியன் டாலர்கள் குறைந்து 574.24 பில்லியன் டாலர்களாக சரிந்துள்ளது.
வெளிநாட்டு நாணய சொத்துகள் என்பது அமெரிக்க டாலர் அல்லாத யூரோ, பவுண்டு, யென் போன்ற நாணயங்களின் இருப்பின் மதிப்பையும் சேர்த்து, இதன் ஏற்ற இறக்கத்தைக் கணக்கில் கொண்டு அமெரிக்க டாலர்களில் மதிப்பிடப்படுகிறது.
இதே காலகட்டத்தில், இந்தியாவின் தங்க கையிருப்பு 1.015 பில்லியன் டாலர்கள் குறைந்து 55.967 பில்லியன் டாலர்களாக உள்ளது. மேலும், ஸ்பெஷல் டிராயீங் ரைட்ஸ் (SDRs) 54 மில்லியன் அமெரிக்க டாலர்கள் குறைந்து 18.107 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
IMF எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தில் இந்தியாவின் கையிருப்பு அளவு 245 மில்லியன் டாலர்கள் அதிகரித்து 4.581 பில்லியன் டாலர்களாக உள்ளது என்றும் ரிசர்வ் வங்கி தகவல் தெரிவிக்கிறது.
Foreign Exchange Reserves outflow: அந்நிய செலாவணி கையிருப்பு குறைவதற்கான காரணங்கள் எனில், தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் அதிகப்படியான முதலீடுகளை வெளியேற்றியது முக்கியமான காரணமாகப் பார்க்கப்படுகிறது.
வெளிநாட்டு முதலீடுகளின் வெளியேற்றம் (Outflow of Foreign Investment): சர்வதேசச் சந்தையில் நிலவும் நிச்சயமற்ற தன்மை காரணமாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தை மற்றும் கடன் பத்திரங்களில் இருந்து தங்கள் முதலீடுகளைத் திரும்பப் பெற்றிருக்கலாம். இதன் காரணமாக, டாலர்களின் வெளியேற்றம் அதிகரித்து, அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்திருக்கலாம்.
தங்கத்தின் மதிப்பு குறைந்தது: தங்கத்தின் சர்வதேச விலை சமீப காலத்தில் சரிந்து வருகிறது. இதன் காரணமாக, இந்திய ரிசர்வ் வங்கியின் தங்கக் கையிருப்பின் மதிப்பும் குறைந்துள்ளது.
டாலர் மதிப்பு உயர்வு: டாலரின் மதிப்பு சர்வதேசச் சந்தையில் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக, பிற நாணயங்களின் மதிப்பு (யூரோ, பவுண்டு, யென் போன்றவை) குறைந்துள்ளது. இந்திய அந்நிய செலாவணி கையிருப்பில் பெரும்பான்மை பகுதி இந்த நாணயங்களில் உள்ளன. இதன் காரணமாக, கையிருப்பின் மதிப்பு டாலர் மதிப்பில் குறைந்துள்ளது.
எதிர்காலம் என்ன சொல்கிறது?
அந்நிய செலாவணி கையிருப்பு தற்காலிகமாகக் குறைந்திருந்தாலும், இந்தியாவின் பொருளாதார அடிப்படைகள் வலுவாக உள்ளன. அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதன் மூலம், அந்நிய செலாவணி கையிருப்பு மீண்டும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார நிபுணர்கள் சிலர், அந்நிய செலாவணி கையிருப்பின் சிறிய அளவிலான இந்த குறைவு கவலைப்பட வேண்டிய விஷயமல்ல என்றும், இந்திய அந்நிய செலாவணி கையிருப்பு இன்னும் வலுவாகவே உள்ளது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
அந்நிய செலாவணி கையிருப்பு என்பது ஒரு நாட்டின் நிதி நிலைதன்மையை (Financial Stability) காட்டும் அளவுகோல்களில் ஒன்று. ஜூன் 14 உடன் முடிந்த வாரத்தில் ஏற்பட்டு உள்ள சரிவு கவனிக்கத்தக்கது என்றாலும், இது இந்தியப் பொருளாதாரத்தின் மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூற முடியாது.


Click it and Unblock the Notifications