நம் நாட்டில் அனில் அம்பானியை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி. இவர் ஒரு காலத்தில் இந்தியாவின் மெகா கோடீஸ்வரராக வலம் வந்தவர். ஆனால் தவறான முதலீடு, நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்தது போன்ற காரணங்களால் இன்று பெரிய கடனாளியாக உள்ளார். இருப்பினும் வர்த்தக நிறுவனங்களை வெற்றி பாதைக்கு திருப்பும் நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இதன் பலனாக அவரது சில நிறுவனங்கள் புத்துயிர் பெற தொடங்கியுள்ளன.
அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமத்தில் உள்ள முக்கியமான ஒரு நிறுவனம் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர். இந்நிறுவனம் மின்சாரம்,சாலைகள்,மெட்ரோ ரயில் மற்றும் பிற உள்கட்டமைப்பு துறைகளுக்கு பொறியியல் மற்றும் கட்டுமான சேவைகளை வழங்கி வருகிறது. மேலும், இந்நிறுவனம் அதன் சிறப்பு நோக்க பிரிவுகள் மூலம் பாதுகாப்பு துறை மற்றும் உள்கட்டமைப்பு பகுதிகளில் பல திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், செயல்படுத்துதல் மற்றும் பராமரிப்பதில் ஈடுபட்டுள்ளது.

ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் தனது துணை நிறுவனமான ரிலையன்ஸ் வெலாசிட்டி லிமிடெட் நிறுவனத்தை தன்னுடன் இணைப்பதாக அறிவித்தது. பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில் ஒன்றில் இந்த தகவலை ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரிலையன்ஸ் குழுமத்தின் கட்டமைப்பை சீர்படுத்துவதற்கும், ஒருங்கிணைப்பதற்கும் இந்த துணை நிறுவனம் இணைப்பு நடவடிக்கை ஒரு பகுதியாகும். இதனால் செயல்திறன் மேம்பட மற்றும் செலவு குறைவதற்கும் வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள் தற்போது மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை பார்க்கும்போது, அனில் அம்பானி மீண்டும் தொழில்துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீப காலமாக ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பங்கு விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் இந்நிறுவன பங்கின் விலை 13 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 6 மாதத்தில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 12.37 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 1,300 சதவீதம் மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் முடிவில் இந்நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 4 சதவீதம் குறைந்து ரூ.229.85ஆக இருந்தது.


Click it and Unblock the Notifications