மும்பை: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், செயற்கைகோள் அடிப்படையிலான ஜிகாபிட் பிராட்பேண்ட் சேவையை வழங்கும் ஜியோ ஸ்பேஸ் ஃபைபர் (Space Fiber) திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நாடு முழுவதும் 5ஜி சேவைகளை வழங்குவதில் தீவிரமாக உள்ளது. ஜியோ நிறுவனம் தற்போது நாட்டில் எளிதில் சேவை வழங்க முடியாத பகுதிகளுக்கு அதாவது கிராமப்புற பகுதிகளுக்கு அல்லது மலைப்பாங்கான பகுதிகளுக்கு அதிவேக இன்டர்நெட்டை வழங்கும் நோக்கில் செயற்கைகோள் அடிப்படையிலான ஜிகாபிட் பிராட்பேண்ட் சேவையை வழங்கும் ஜியோ ஸ்பேஸ் பைபர் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் தொழில்நுட்ப கருத்தரங்கான இந்திய மொபைல் காங்கிரஸ் 2023 நிகழ்வை தொடங்கி வைத்தார். இந்திய மொபைல் காங்கிரஸில் ரிலையன்ஸ் ஜியோ தனது இந்தியாவின் முதல் செயற்கைகோள் அடிப்படையிலான ஜிகாபைபர் இன்டர்நெட் சேவை உள்ளிட்ட தனது சாதனங்களை காட்சி படுத்தி இருந்தது.
பிரதமர் மோடி முன்னிலையில், ஜிகாபைபர் இன்டர்நெட் சேவையின் செயல்படும் விதத்தை ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் தலைவர் ஆகாஷ் அம்பானி செய்து காட்டினார்.
ஜிகாபைபர் இன்டர்நெட் சேவை வழங்குவதற்காக MEO செயற்கைகோள் தொழில்நுட்பத்தை பயன்படுத்த SES நிறுவனத்துடன் வர்த்தக கூட்டு வைத்துள்ளது. விண்வெளியில் இருந்து தனித்துவமான ஜிகாபிட், ஃபைபர் போன்ற சேவைகளை வழங்கும் திறன் ஒரே செயற்கைகோள் தொழில்நுட்பம் MEO என்பது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ் ஜியோவால் ES நிறுவனத்தின் O3b மற்றும் new O3b mPOWER செயற்கைக்கோள்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். இதன் மூலம் இந்தியாவில் தொலைத்தொடர்பு துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் தொழில்நுட்பத்தை வழங்கும் ஒரே நிறுவனமாக ஜியோ விளங்குகிறது.
ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோ ஸ்பேஸ் ஃபைபர் சேவை தற்போது, குஜரத்தின் கிர், சத்தீஸ்கரில் கோர்பா, ஒடிசாவின் நப்ராங்பூர் மற்றும் அசாமில் ஓ.என்.ஜி.சி.-ஜோர்ஹத் ஆகிய தொலைத்தூர இடங்களில் கிடைக்கிறது.
மிகவும் குறைந்த விலையில் நாடு முழுவதும் இந்த சேவை கிடைக்கும் என ஜியோ தெரிவித்துள்ளது. ஜியோவின் ஸ்பேஸ் பைபர் சேவை போட்டி நிறுவனங்களான பார்தி ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியாவுக்கு கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ ஏற்கனவே 450 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு வேகமான பிராட்பேண்ட் மற்றும் வயர்லெஸ் இணையதள சேவை வழங்கி வருகிறது.


Click it and Unblock the Notifications