இந்தியாவில் கடந்த இரண்டு நிதியாண்டுகளில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கிய முக்கிய துறைகளான லைப்ஸ்டைல், மளிகை பொருட்களின் ரீடைல் கடைகள் மற்றும் உணவகங்களில் (QSR) 2024ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் 26,000 பேர் வேலை இழந்துள்ளனர்.
இந்தியாவின் வர்த்தக அடித்தளத்திற்கு ரீடைல் துறை மிகவும் முக்கியமானதாக இருக்கும் வேளையில், இத்துறையில் விற்பனை குறைந்ததால் நிறுவனங்கள் தங்கள் கடைகளை விரிவுபடுத்துவதை நிறுத்தும் முடிவை எடுத்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சாம்ராஜ்ஜியத்தின் ரிடைல் வர்த்தக பிரிவான ரிலையன்ஸ் ரீடைல், டைட்டன், ரேமண்ட், பேஜ் மற்றும் ஸ்பென்சர்ஸ் ஆகிய ஐந்து நிறுவனங்களில் மட்டும் 52,000 பேர் வேலை இழந்து, இதன் நிறுவனங்களின் மொத்த ஊழியர் எண்ணிக்கையில் சுமார் 17 சதவீதம் குறைந்துள்ளது.
விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக வேலைவாய்ப்பு கொண்டது இந்திய ரீடைல் துறை, இத்துறையில் ஏற்பட்டுள்ள வேலைவாய்ப்பு குறைப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ரீடைல் துறையில் நிரந்தர ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் என கடந்த ஆண்டு சுமார் 4,55,000 பேர் பணியாற்றினர், ஆனால் 2024 ஆம் நிதியாண்டில் 4,29,000 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.
பணவீக்கம், வட்டி விகித உயர்வு, ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் ஐடி துறைகளில் வேலை இழப்பு, பொருளாதார மந்தநிலை போன்ற காரணங்களால், 2022 தீபாவளிக்குப் பிறகு ஆடை, லைப்ஸ்டைல் பொருட்கள், எலக்டரானிக்ஸ் பொருட்கள் மற்றும் ஹோட்டல் உணவு உண்பது போன்ற தேவையற்ற செலவுகளை நுகர்வோர் குறைக்க மக்கள் தொடங்கினர்.
கொரோனாவுக்குப் பிறகு ஆடைகள் முதல் கார்கள் வரை அனைத்து பிரிவுகளிலும் செலவு அதிகரித்ததைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு சில்லறை விற்பனை வளர்ச்சி 4% ஆக குறைந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகக் குறைந்த விகிதத்தில் கடைகளை விரிவுபடுத்தியுள்ளது முக்கியமான கவனிக்க கூடிய விஷயமாகும்.
வணிக வாடகை சேவை நிறுவனமான சிபிஆர்இ கூறுகையில், 2023 ஆம் ஆண்டில் நாட்டின் டாப் எட்டு நகரங்களில் 7.1 மில்லியன் சதுர அடி இடத்தை சில்லறை துறை எடுத்தது, இது 2024 இல் 6-6.5 மில்லியன் சதுர அடிக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சில்லறை விற்பனையாளர்களின் அமைப்பான இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்கத்தின் சிஇஓ குமார் ராஜகோபாலன் கூறுகையில், "இந்திய ரீடைல் துறையில் திறமை பற்றாக்குறை உள்ளது, இதை சரி செய்ய பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பணியாளர்களை நியமிக்க முயற்சித்து வருகிறோம். நடப்பு நிதியாண்டில் சில நிறுவனங்கள் சில குறிப்பிட்ட வணிகங்களை மூடியதால் ஊழியர்களைக் குறைத்திருக்கலாம். ஷாப்பர்ஸ் ஸ்டாப் மற்றும் ட்ரெண்ட் போன்ற நிறுவனங்கள் விரிவாக்கம் செய்து வருவதால் ஊழியர்கள் தேவை இப்போதும் உள்ளது" என்று எக்னாமிக்ஸ் டைம்ஸ் பத்திரிக்கையில் தெரிவித்துள்ளனர்.
உதாரணமாக டைட்டன் 2023ஆம் நிதியாண்டில் 26,104 ஊழியர்களை வைத்திருந்த நிலையில் 2024 ஆம் நிதியாண்டில் 17,535 ஆக ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதேபோல் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் ஊழியர்கள் எண்ணிக்கை 2,45,581ல் இருந்து 2,07,552 ஆக குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications