அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்து வரக்கூடிய வரி விதிப்பு நடவடிக்கைகள் உலகப் பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. ஏற்கனவே அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலையை நோக்கி சென்று இருக்கிறது.
பங்குச்சந்தைகள்: பல்வேறு நாடுகளின் மீது டிரம்ப் விதிக்க கூடிய இறக்குமதி வரி , குறிப்பிட்ட நாடுகளுக்கு இடையிலான புவிசார் மோதல்கள் உலக பொருளாதாரத்தை நிலையற்றதாக மாற்றி வைத்திருக்கின்றன. இந்த நிலையில் கூடிய விரைவில் பங்குச்சந்தை பெரிய வீழ்ச்சியை காணும் என Rich dad Poor dad எழுத்தாளர் ராபர்ட் கியோஸாகி எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

ராபர்ட் கியோஸாகி: கடந்த 2008- 2009 ஆம் ஆண்டு உலக அளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியை முன்கூட்டியே கணித்தவர் தான் ராபர்ட் கியோஸாகி. தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் தொடர்ச்சியாக உலக பொருளாதாரம் குறித்தும் எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்தும் அவர் பதிவிட்ட வண்ணம் இருக்கிறார். இந்த சூழலில் அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய எக்ஸ் தள பதிவில் பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சியை காணப் போகிறோம் பங்குகள் பெரிய அளவில் சரிவை காணப் போகின்றன என குறிப்பிட்டு இருக்கிறார் .
எந்த முதலீடு பாதுகாப்பானது: தங்கம் , வெள்ளி மற்றும் பிட்காயினில் முதலீடு செய்தவர்களுக்கு பிரச்சனை இல்லை என சுட்டிக்காட்டி இருக்கும் அவர் பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள் கெட்ட செய்திக்காக காத்திருங்கள் என பதிவிட்டு இருக்கிறார் . ராபர்ட் கியோஸாகி நீண்ட காலமாகவே பங்குச்சந்தையில் மட்டும் முதலீடு மேற்கொள்ளக்கூடாது தங்கம், வெள்ளி மற்றும் பிட்காயினிலும் முதலீடு செய்யுங்கள் என அறிவுரை வழங்கி வருகிறார்.
தங்கம் ,வெள்ளி எவ்வளவு உயர்வு: பொருளாதார நிலையற்ற தன்மை , பணவீக்கம், அமெரிக்க டாலர் வலுவிழந்து போவது உள்ளிட்ட சமயங்களில் எல்லாம் தங்கம் ,வெள்ளி மற்றும் பிட்காயினில் செய்த முதலீடுகள் தான் உங்களுக்கு உதவும் என அவர் தொடர்ச்சியாக கூறி வருகிறார். ராபர்ட் கியோஸாகியின் அறிவுரை போலவே இந்த ஆண்டில் மட்டும் இந்திய சந்தையிலே பார்த்தோம் என்றால் 24 கேரட் தங்கம் விலை 10 கிராம் என்பது ஒரு லட்சம் ரூபாயை கடந்துவிட்டது. கிட்டத்தட்ட 30% தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது. வெள்ளியும் ஒரு கிலோ 1, 27,000 ரூபாய் என்று அளவில் விற்கப்படுகிறது. ஓராண்டு காலத்தில் வெள்ளி விலை மட்டும் 44% உயர்ந்திருக்கிறது.
பிட்காயின் எவ்வளவு உயர்வு: பிட்காயின் கடந்த ஓராண்டில் 111 சதவீதம் உயர்ந்திருக்கிறது. ஏற்கனவே சர்வதேச பங்குச்சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் தான் காணப்படுகின்றன. இதற்கு பல்வேறு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறைந்திருப்பது, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கடன் அளவு அதிகரித்திருப்பது,மத்திய வங்கிகளின் வட்டி விகிதங்கள் குறைக்கப்படாமல் இருப்பது உள்ளிட்டவற்றை காரணமாக கூறலாம். இந்நிலையில் ராபர்ட் கியோஸாகி வெளியிட்டிருக்கும் இந்த அறிவுரை பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications