தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தாலும், அதன் மீதான மோகம் மட்டும் மக்களுக்கு எப்போதும் குறைவதில்லை. கலாச்சாரத்தின் அடையாளமாகவும், முதலீட்டு உலோகமாகவும் தங்கம் நம் நாட்டில் அதிக கவனம் பெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தசரா மற்றும் தீபாவளி பண்டிகையின் போது, தங்கத்தின் விற்பனை உச்சத்தை எட்டுகிறது.
இதற்கிடையே, தங்கத்தின் விலையை ஜிஎஸ்டி மற்றும் இறக்குமதி வரிகள் எவ்வாறு பாதிக்கின்றன என்பதை ஆராய்வது, இந்த பண்டிகை காலத்தில் இந்தியர்கள் தங்கத்தின் உண்மையான விலையைத்தான் செலுத்துகிறார்களா என்பதை அறிய உதவுகிறது. இன்று சென்னையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.1,24,370 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதில் 3 சதவீத ஜிஎஸ்டி மட்டும் ரூ.3,731 ஆக உள்ளது. இத்துடன் செய்கூலி மற்றும் மற்ற கட்டணங்கள் தனி. ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மற்ற பொருட்கள் மீதான வரியை குறைத்த போதிலும், தங்கம் மீதான வரி குறைக்கப்படாத காரணத்தால் நுகர்வோர் மீதான வரிச் சுமையை குறைக்கவில்லை.

தங்கக் கடத்தலை கட்டுப்படுத்தவும், உள்நாட்டு விலையை உலகளாவிய விலைகளுடன் சமன் செய்யவும், அரசாங்கம் இறக்குமதி வரியை 15% இல் இருந்து 6% ஆக குறைத்துள்ளது. இந்த வரி குறைப்பானது சில்லறை விலையில் குறைய வேண்டும். ஆனால், தங்கத்தின் விலைகள் உச்சத்திலேயே நீடிக்கும் காரணத்தால் இந்த வரி குறைப்பும் பயன் இல்லாமல் போகிறது.
சில்லறை விற்பனையாளர்கள் பண்டிகை கால டிமாண்ட்-ஐ பயன்படுத்தி, விலையை உயர்த்தியே விற்பனை செய்கின்றனர். தீபாவளியின்போது மக்கள் தங்கம் வாங்குவது என்பது, முதலீட்டையும் கலாச்சாரத்தையும் அடிப்படையாகக் கொண்டது. விலை சாதனை அளவில் இருந்தாலும், தங்கம் இன்னும் மக்களின் விருப்பமாகவே உள்ளது. இருப்பினும், வாங்கும் முறைகள் மாறத் தொடங்கியுள்ளன.
அகமதாபாத்தில் பாரம்பரியமாக நகைகள் வாங்குவது தசரா காலத்தில் 33% குறைந்த நிலையில், பெரும்பாலான மக்கள் சிறிய நாணயங்கள், லேசான நகைகள் அல்லது வெள்ளி ஆகியவற்றை வாங்குவதில் கவனம் செலுத்தியுள்ளனர். இதேபோல், எளிதான முதலீட்டு முறைகளான எலக்ட்ரானிக் தங்கம், எஸ்ஜிபி-க்கள் மற்றும் இடிஎஃப்-கள் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துகின்றனர்.
எனவே, பண்டிகை காலங்களில் இறக்குமதியின் அளவு, தொடர்ந்து நீடித்து வருகிறது. செப்டம்பரில் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதியை ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்தது. இதன் மூலம், மக்கள் பலரும் இந்த காலகட்டத்தில் முதலீடு செய்ய தொடங்குகின்றனர்.
சர்வதேச விலையின் நிச்சயமற்ற தன்மை மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் காரணமாகவும் தங்கத்தின் விலை உயர்கிறது. இந்தப் பண்டிகை காலத்தில், தங்கச் சந்தை என்பது கொள்கை, பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் ஆகிய மூன்றின் கலவையாக திகழ்கிறது. இறக்குமதி வரியைக் குறைத்தாலும், ஜிஎஸ்டி மாற்றங்களும் வரவேற்கத்தக்கவை என்றாலும், அவை சந்தை விலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை


Click it and Unblock the Notifications