ஆர்ஓஐஐசி (ROIIC) அல்லது கூடுதல் முதலீட்டு மூலதனத்தின் மீதான வருமானம் என்பது நிறுவனங்கள் லாபத்தை ஈட்ட தங்களது கூடுதல் முதலீடுகளை எவ்வளவு திறம்பட பயன்படுத்துகிறார்கள் என்பதை அளவிடுவதற்கான ஒரு வழியாகும்.பொதுவாக நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தை விரிவாக்க விரும்பும்போது, புதிய உபகரணங்களை வாங்குதல், புதிய தயாரிப்புகளை தொடங்குதல் அல்லது புதிய சந்தைகளுக்கு நுழைதல் போன்றவற்றுக்காக கூடுதல் முதலீடுகளை செய்கின்றன. இந்த கூடுதல் முதலீடுகளிலிருந்து கிடைக்கும் லாபத்தை கணக்கிட அல்லது அளவிட ஆர்ஓஐஐசி அவர்களுக்கு உதவுகிறது.
கூடுதல் முதலீட்டு மூலதனத்தின் மீதான வருமானத்தை எளிதாக கணக்கிடலாம். கூடுதல் லாபத்தை கூடுதல் முதலீட்டால் வகுத்து அதனை 100ல் பெருக்கினால் ஆர்ஓஐஐசி கிடைக்கும். உதாரணமாக, ஒரு நிறுவனம் புதிய திட்டத்தில் ரூ.10 லட்சம் முதலீடு செய்கிறது அதன் மூலம் அந்நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் கூடுதல் வருமானம் கிடைக்கிறது என்றால் கூடுதல் முதலீட்டு மூலதனத்தின் மீதான வருமானம் 10 சதவீதமாகும் (1 லட்சம் / 10 லட்சம் ) x 100 = 10).

பல வணிகங்களில் இது (10 சதவீதம்) நல்ல ஆதாயம் இல்லை ஏனென்றால் கூடுதல் முதலீடு பெரிய லாபத்தை உருவாக்கவில்லை. அதேசமயம், ஒரு வணிகத்தில் ரூ.10 லட்சம் முதலீடு செய்து ரூ.5 லட்சம் லாபம் கிடைத்தால் அதன் கூடுதல் முதலீட்டு மூலதனத்தின் மீதான வருமானம் 50 சதவீதமாகும். இது முதலீட்டுக்கு நல்ல ஆதாயத்தை கொடுத்துள்ளதை வெளிப்படுத்துகிறது.
நன்மைகள்: ஆர்ஓஐஐசி சரிபார்ப்பு ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி உண்மையிலேயே லாபகரமானதா அல்லது அதிக வருமானம் இல்லாத விரிவாக்கமா என்பதை புரிந்து கொள்ள உதவுகிறது. நிறுவனங்கள் முதலீடுகளை தொடர வேண்டுமா அல்லது பிற உத்திகளுக்கு மாற வேண்டுமா என்பதை தீர்மானிக்க ஆர்ஓஐஐசி பயன்படுத்தலாம். நீண்ட காலத்துக்கு தொடர்ந்து அதிக ஆர்ஓஐஐசி கொண்ட ஒரு நிறுவனம் நிதி ரீதியாக மிகவும் வலுவானதாகவும் நிலையானதாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
நிறுவனம் முதலீடு செய்வதற்கு முன், இந்த புதிய முதலீட்டிலிருந்து எவ்வளவு கூடுதல் லாபத்தை எதிர்பார்க்கலாம் என்பதை மதிப்பிட உதவுகிறது. புதிய திட்டத்துக்கு எவ்வளவு முதலீடு தேவைப்படும் என்பதை முன்கூட்டியே கணக்கிட உதவுகிறது. இதில் ஆராய்ச்சி முதல் ஊழியர்ளை பணியமர்த்துதல் வரையிலான அனைத்து செலவுகளும் அடங்கும். நிறுவனம் முதலீடு செய்த பிறகு, புதிய திட்டம் எவ்வளவு கூடுதல் லாபத்தை ஈட்டுகிறது என்பதை கணக்கிட உதவுகிறது.
டெக் கியர் என்ற தொழில்நுட்ப கேஜெட்களை விற்பனை செய்யும் நிறுவனம், புதிய ஸ்மார்ட் வாட்சை தயாரிப்பில் முதலீடு செயய முடிவு செய்கிறது. அடுத்த ஆண்டில் ஸ்மார்ட் வாட்ச் வணிகம் மூலமாக கூடுதலாக ரூ.20 லட்சம் வருமானம் வரும் என்று கணித்துள்ளனர். வடிவமைப்பு,ஆராய்ச்சி, உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் உட்பட ஸ்மார்ட் வாட்சின் மேம்பாட்டுக்காக ரூ.40 லட்சம் செலவாகும் என நிறுவனம் கணித்துள்ளது. இப்போது ஆர்ஓஐஐசி பார்முலாவை பயன்படுத்தி இந்த திட்டத்தை தொடரலாமா வேண்டாமா என்பதை பார்க்கலாம். ஆர்ஓஐஐசி = (20 லட்சம் / 40 லட்சம் ) x 100 = 50 சதவீதம்.
ஆர்ஓஐஐசி 50 சதவீதமாக இருப்பதால், ஸ்மார்ட்வாட்சில் முதலீடு செய்யும் ஒவ்வொரு ரூபாய்க்கும் 50 காசுகள் கூடுதல் லாபம் ஈட்டுவதாக டெக கியர் நிறுவனத்துக்கு காட்டுகிறது. இது உறுதியான வருமானம் என்பதால், அந்த திட்டத்தை தொடரலாம் என்பதை ஆர்ஓஐஐசி தெரிவிக்கிறது.
ஆர்ஓஐஐசி குறைகள்:புதிய முதலீடு எவ்வளவு கூடுதல் லாபத்தை உருவாக்கும் என்பதை துல்லியாக கணிப்பது கடினமானது. மேலும் அனுமானங்கள் எப்போதும் உண்மையாக இருக்காது. சில முதலீடுகள் வருமானத்தை காட்ட நீண்ட காலம் எடுக்கும். எனவே இது குறுகிய கால ஆர்ஓஐஐசி கணக்கீடுகளை சில சந்தர்ப்பங்களில் பயனுள்ளதாக இருக்காது. அதிக ஆர்ஓஐஐசி எண்கள் எப்போதும் குறைந்த ஆபத்தை குறிக்காது. சில அதிக வருமான முதலீடுகள் நிறைய நிச்சயமற்ற தன்மை அல்லது நிலையற்ற தன்மையை உள்ளடக்கியிருக்கலாம்.
Story Written by: Subramanian


Click it and Unblock the Notifications