சென்னை: இந்திய வீடுகளில் தலைமுறை தலைமுறையாக இடம்பெறும் காலை மற்றும் இரவு உணவான ரொட்டிக்கு ஏன் 5 சதவீத GST வரியும், அதே நேரத்தில் பரோட்டாவுக்கு ஏன் 18 சதவீத GST வரியும் விதிக்கப்படுகிறது என்று என்றாவது யோசித்ததுண்டா? இந்த ஒரே மாதிரியான உணவுகளுக்கு விதிக்கப்படும் வரி விகிதங்களில் உள்ள வேறுபாடு இந்தியாவின் GST அமைப்பின் தன்மையைக் சுட்டிக் காட்டுகிறது. இந்தக் கட்டுரையில், ரொட்டி மற்றும் பரோட்டாவுக்கான GST வரி விகிதங்களுக்குப் பின்னால் உள்ள காரணங்களைப் பற்றிப் பார்ப்போம்.
ரொட்டி மற்றும் பரோட்டா தயாரிக்கப்படும் பொருட்கள்: ரொட்டி மற்றும் பரோட்டா ஆகிய இரண்டிற்கும் GST விகிதங்கள் ஏன் வேறுபடுகின்றன? என்பதைப் புரிந்து கொள்ள, ரொட்டி மற்றும் பரோட்டா எதில் தயாரிக்கப்படுகின்றன என்பதைப் பார்ப்பது அவசியம். ரொட்டி என்பது கோதுமை மாவு, தண்ணீர் மற்றும் உப்பு ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு எளிய பிளாட்பிரெட் (flatbread) ஆகும். இது பொதுவாக உணவுடன் சேர்த்து உண்ணப்படுகிறது. பரோட்டா, மறுபுறம், காய்கறிகள், மசாலாப் பொருட்கள் மற்றும் எண்ணெய்கள் போன்ற கூடுதல் பொருட்களுடன் தயாரிக்கப்படும் பிளாட்பிரெட் ஆகும்.

எழுந்த GST பிரச்சனை: பரோட்டாவுக்கான GST வரி பிரச்சினை 2021 ஆம் ஆண்டில் குஜராத் அத்தாரிட்டி ஃபார் அட்வான்ஸ் ரூலிங்ஸ் (AAR) முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில், பேக்கேஜ் செய்யப்பட்ட பரோட்டாக்களை விற்பனை செய்யும் "M/s Vadilal Industries Ltd" என்ற நிறுவனம், ரொட்டி போன்ற உணவுப் பொருட்களுக்கு குறைவான GST வரி விதிக்கப்படும் போது, பரோட்டாவுக்கு ஏன் 18 சதவீத GST வரி விதிக்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பியது.
பிரெட் (bread) மற்றும் ரொட்டியுடன் ஒப்பிடும்போது, அதிகமானப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதன் காரணமாக பரோட்டாக்களுக்கான 18 சதவீத GST-யை AAR உறுதி செய்தது. இந்த முடிவானது குஜராத் மேல்முறையீட்டு ஆணையம் (AAAR) மூலம் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது. இதன் மூலம், பரோட்டா அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவு என்பதால், அதற்கு அதிக GST வரி விதிக்கப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது.
HSN குறியீடு: ஹார்மோனிஸ்டு சிஸ்டம் ஆஃப் நோமென்க்லேச்சர் (HSN) குறியீடு, ஒவ்வொரு பொருட்களுக்கான GST விகிதத்தை தீர்மானிக்க உதவுகிறது. பரோட்டாக்கள் HSN குறியீடு 21069099-இன் கீழ் வருகின்றன. பரோட்டாக்கள் பெரும்பாலும் சூடுபடுத்தி உண்ணும் செயல்முறைகளுடன் வருகின்றன. மேலும் அவற்றை உண்ணும் முன் கூடுதல் செயலாக்கம் தேவை என வகைப்படுத்துகிறது. பரோட்டாவை உண்பதற்கு முன்பு அவற்றை சூடாக்க வேண்டும். இதுவே பரோட்டாவை பிரட் மற்றும் ரொட்டியிலிருந்து தனித்து வேறுபடுத்துகிறது.
எளிமையாக தயாரிக்கப்படும் பொருட்கள் எனில், அவற்றிற்கு குறைந்த GST விதிக்கப்படுகிறது. ரொட்டி மற்றும் சப்பாத்தி போன்றவை HSN வகைப்பாட்டில் 1905-கீழ் வருகின்றன. இதன் காரணமாக, இவற்றின் தயாரிப்பு மற்றும் உபயோகிக்கும் முறை எளிமையாக இருப்பதால், இவற்றுக்கு 5% என்ற குறைவான GST வரி விதிக்கப்படுகிறது.
ரொட்டிக்கும், பரோட்டாவுக்கும் இடையே உள்ள GST வரி வித்தியாசம், உணவுப் பொருட்களில் சேர்க்கப்படும் பொருட்கள் மற்றும் பதப்படுத்தும் முறையை அடிப்படையாகக் கொண்டு வரி அதிகாரிகள் எவ்வாறு வகைப்படுத்துகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. ரொட்டி எளிமையாக தயாரிக்கப்படுவதால் குறைந்த வரி விதிக்கப்படுகிறது, அதே சமயம் பரோட்டா அதிக கவனம் செலுத்தி தயாரிக்கப்படுவதால் அதற்கு அதிக வரி விதிக்கப்படுகிறது. இது போன்ற வரி வித்தியாசங்களைக் புரிந்து கொள்வதன் மூலம், வரிக்கான காரணங்களையும், பொருட்கள் மீதான தாக்கங்களையும் நாம் அறிந்து கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications