உலக தங்க சந்தையில் அண்மைகாலமாக முக்கியமான மாற்றம் நடந்துள்ளது. குறிப்பாக அதிக அளவிலான தங்கம் சந்தைக்கு வர தொடங்கியுள்ளது. இதற்கு ரஷ்யா எடுத்த ஒரு முடிவு தான் காரணம்.
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 5 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. போரில் ரஷ்யாவின் பலத்தை குறைக்க வேண்டும் என்பதற்காகவும் பொருளாதார ரீதியாக ரஷ்யாவை பின்னுக்கு தள்ளவும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இந்த பொருளாதார தடைகள் காரணமாக ரஷ்யாவுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ரஷ்யா தனது பொருளாதாரத்தை தக்க வைக்க இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்தது. அதற்கும் அமெரிக்கா முட்டுக்கட்டை போட்டதால் தங்கள் இருப்பில் இருக்கும் தங்கத்தை ரஷ்யா வெளியில் எடுத்துள்ளது. இந்த தங்கம் நேரடியாக ஹாங்காங் வழியாக சீன சந்தைக்குள் நுழைவது தெரிய வந்துள்ளது.
ரஷ்ய அரசு விற்கும் தங்கமும், ரஷ்ய நிறுவனங்கள் விற்கும் தங்கமும் நேரடியாக ஹாங்காங் வந்து சீனாவுக்கு தான் செல்கின்றன. ஹாங்காங் அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி, 2026ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் அதாவது ஜனவரி முதல் ஜூலை வரை ஹாங்காங்கிற்கு 112.7 மெட்ரிக் டன் தங்கம் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2025ஆம் ஆண்டு சாதனையான 92.1 மெட்ரிக் டன்னை விட மிக அதிகமாகும்.
உக்ரைன் மீதான போர் தொடங்குவதற்கு முன்பு, அதாவது 2021ஆம் ஆண்டில் ஹாங்காங் இறக்குமதி செய்த ரஷ்யத் தங்கத்தின் அளவு வெறும் 3.3 மெட்ரிக் டன் மட்டுமே. ஆனால், தற்போது ஹாங்காங்கின் ஒட்டுமொத்த நாணயமற்ற தங்கம் இறக்குமதியில் ரஷ்ய தங்கத்தின் பங்கு கிட்டத்தட்ட 15% ஆக உயர்ந்துள்ளது. 2021இல் இது வெறும் 0.6% மட்டுமே இருந்தது.
வரலாற்று ரீதியாக, ரஷ்யாவில் க உற்பத்தியாகும் தங்கத்தில் மூன்றில் இரண்டு பங்குக்கு இணையான தங்கம் பிரிட்டனின் லண்டன் சந்தைக்குத்தான் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால், உக்ரைன் போர் காரணமாக லண்டன் புல்லியன் மார்க்கெட் அசோசியேஷன் ரஷ்ய தங்கம் இறக்குமதிக்கு தடை விதித்தது. இதனால் பாரம்பரிய சந்தைகளை இழந்த ரஷ்யா தற்போது ஆசிய நாட்டு சந்தைகளையே கவனம் செலுத்துகிறது.
ஹாங்காங் தற்போது ரஷ்ய தங்க உற்பத்தியாளர்களுக்கும் சீனாவுக்கும் இடையேயான ஒரு முக்கிய வர்த்தக நுழைவு வாயிலாக உருவெடுத்துள்ளது. ஹாங்காங் வழியாக வரும் பெரும்பான்மையான ரஷ்ய தங்கம் பின்னர் சீனாவிற்கே கொண்டு செல்லப்படுகிறது.
ஏற்கனவே சீன மத்திய வங்கி தனது தங்கம் மற்றும் அந்நிய செலாவணி கையிருப்புகளைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் சீனாவின் அதிகாரப்பூர்வ தங்க கையிருப்பு 40 மெட்ரிக் டன்களுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்கிற்கும் அதிகமாகும்.
ரஷ்யாவின் தங்கம் கிடைப்பது சீனாவுக்கும் இன்னமும் லாபமாக மாறியுள்ளது. அமெரிக்க டாலருக்கு செக் வைப்பதற்கான ஆயுதமாக தங்கத்தை பயன்படுத்த சீனா வியூகம் வகுக்கும் நிலையில் ரஷ்யா தங்கத்தின் வருகை சீனாவுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications


