சபரிமலை ஐயப்பன் கோயிலில் இருந்து தங்கத் தகடுகள் திருடப்பட்ட வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) நடிகர் ஜெயராமை விசாரணைக்கு அழைத்தது. சென்னை அசோக் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடந்த இந்த விசாரணையில் ஜெயராம் முக்கிய தகவல்களை தெரிவித்தார்.
கோயிலின் கருவறைக்காக உருவாக்கப்பட்ட தங்கத் தகடுகள் கேரளாவிலிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டதாக போலீஸ் கண்டறிந்தது. இந்த தகடுகள் ஜெயராமின் சென்னை இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டதை அவர் விசாரணையில் உறுதிப்படுத்தினார்.

ஜெயராம் தனது வாக்குமூலத்தில், கடந்த 40 ஆண்டுகளாக சபரிமலைக்கு தொடர்ந்து சென்று வருவதாகக் கூறினார். அங்கு அவருக்கு அர்ச்சகர் உன்னிகிருஷ்ணன் போட்டியுடன் நல்ல பழக்கம் ஏற்பட்டது. புதிதாக செய்யப்பட்ட தங்கத் தகடுகளை வீட்டில் வைத்து பூஜை செய்தால் செல்வம் பெருகும் என்று உன்னிகிருஷ்ணன் கூறியதாக ஜெயராம் தெரிவித்தார்.
அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தகடுகளை வீட்டில் வைத்து பூஜை நடத்தினார். சென்னையில் உள்ள ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் என்ற இடத்தில் பூஜை நடந்தது. பின்னர் கோட்டயத்தில் உள்ள கோயிலில் ஊர்வலமும் நடைபெற்றது. இந்த நிகழ்வுகளில் ஜெயராம் கலந்துகொண்டதை அவர் உறுதிப்படுத்தினார்.

ஆனால் தங்கத் தகடுகளுடன் தொடர்புடைய எந்த பண பரிவர்த்தனையும் தனக்கு இல்லை என்றும், இது தொடர்பான எந்த மோசடியும் தனக்கு தெரியாது என்றும் அவர் தெரிவித்தார். SIT அதிகாரிகள் ஜெயராமை இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் நீதிமன்றத்தில் சாட்சியாக ஆஜராகுமாறு கேட்டுள்ளனர். தற்போது அவர்மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்க திட்டமில்லை என்று SIT தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கியது. கோயில் ஆய்வின் போது தங்கத் தகடுகள் குறைந்திருப்பது தெரியவந்தது. அவற்றுக்கு பதிலாக செப்புத் தகடுகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த மோசடியில் முன்னாள் அர்ச்சகர் உன்னிகிருஷ்ணன், திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு முன்னாள் அதிகாரிகள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமலாக்கத்துறை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 21 இடங்களில் சோதனை நடத்தியது.
தங்கத் தகடுகள் கோயிலுக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டது, பூஜைக்காக வைக்கப்பட்டது ஆகியவை புகைப்படம் வெளியானதை தாண்டி ஜெயராம் வாக்குமூலம் வாயிலாக தற்போது உறுதியாகியுள்ளன. இது வழக்கு விசாரணைக்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சாதாரண பக்தர்களுக்கு இது கோயில் சொத்துகள் பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications