இந்தியாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான சஹாரா குழுமத்தின் தலைவரும் நிர்வாக அதிகாரியுமான சுப்ரதா ராய், மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் இருதயச் சுவாசக் கோளாறு காரணமாக 75 வயதில் இன்று காலமானார்.
சஹாரா குழுமத்தின் அறிக்கையின் மூலம் சுப்ரதா ராய் மரணம் குறித்த செய்தி பொது மக்களுக்கு வெளியிடப்பட்டது, சஹாரா குழுமம் தனது அறிக்கையில் சுப்ரதா ராய் அவர்களை ஒரு உத்வேகம் தரும் தலைவர், தொலைநோக்கு பார்வை கொண்ட அதிகாரியை இழந்ததில் ஆழ்ந்த வருத்தம் அடைகிறோம் எனத் தெரிவித்துள்ளது.

சுப்ரதா ராய் இந்திய ரியல் எஸ்டேட் துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தாலும் போன்சி திட்டங்கள் அதாவது போலி முதலீட்டுத் திட்டங்களை இயக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டார். இது மட்டும் அல்லாமல் மோசடி காரணமாகக் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் சிறையில் இருந்தார்.
இது மட்டும் அல்லாமல் சுப்ரதா ராய் மற்றும் அவர் தலைமை விகித்த சஹாரா குழுமம், அதன் அதிகாரிகள் எனப் பலர் மீது ஒழுங்குமுறை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுப் பல வருடம் வழக்கு நடந்தது, சில சொத்துக்களும் முடக்கப்பட்டது.
2010 முதல் செபி வழக்குத் தொடுத்து விசாரணை நடத்தி 2014ல் கைது செய்யப்பட்டர். முதலீட்டாளர்களின் 24000 கோடி ரூபாய் மதிப்பிலான தொகையைத் திருப்பிச் செலுத்துவது குறித்த இந்த வழக்கு பல வருடம் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.
'சஹாராஸ்ரீ' என்று அழைக்கப்படும் சுப்ரதா ராய் சஹாரா குழுமத்தை ரீடைல் வர்த்தகம், ரியல் எஸ்டேட், நிதிச் சேவைகள், விமானப் போக்குவரத்து மற்றும் ஊடகம் எனப் பல்வேறு துறைகளில் நுழைந்து பல பில்லியன் டாலர் மதிப்பிலான நிறுவனமாகச் சஹாரா குழுமத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்தார்.
சுப்ரதா ராய் இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலக நாடுகளிலும் அதிகப்படியான சொத்துக்களைச் சஹாரா குழுமத்தின் வாயிலாக வாங்கியுள்ளார். இதில் முக்கியமாக நியூயார்க்கில் ப்ளாசா ஹோட்டல், லண்டனில் Grosvenor House ஆகியவற்றை வாங்கினார்.
இது மட்டும் அல்லாமல் கிரிக்கெட், ஹாக்கி, பார்மூலா ஒன் ஆகிய விளையாட்டுப் போட்டிகளில் சஹாரா குழுமத்தின் முதலீடும், ஸ்பான்சர்ஷிப்பும் மிகவும் முக்கியமானது. சுப்ரதா ராய் தனது இரு மகன்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட திருமணங்கள் இன்று வரையில் பேசப்படுகிறது.


Click it and Unblock the Notifications