இந்தியாவில் வங்கி சேவையில் தனியார் வங்கிக்கும், பொதுத்துறை வங்கிக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் வங்கிகளில் சேவை மிகவும் தாமதமாக கிடைக்கும் போக்கு உள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள், குறிப்பாக அதிக வருமானம் கொண்ட மக்கள் தனியார் வங்கி சேவையை அதிகம் நாடுகின்றனர். ஆனால் தற்போது இந்த சூழ்நிலை மொத்தமாக மாறியுள்ளது என்றால் மிகையில்லை, குறிப்பாக கடன் சேவையில் பொதுத்துறை நிறுவனங்கள் மாஸ் காட்டி வருகிறது.
2011-க்குப் பிறகு முதன்முறையாக, பொதுத்துறை வங்கிகள் கடன் வளர்ச்சியில் தனியார் வங்கிகளை 4 சதவீத வித்தியாசத்தில் 2025 நிதியாண்டின் முடிவில் முந்தியுள்ளது. பொதுத்துறை வங்கிகள் 13.1% வருடாந்திர கடன் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன, அதே நேரத்தில் தனியார் வங்கிகளின் கடன் வர்த்தக வளர்ச்சி வெறும் 9% மட்டுமே பதிவு செய்துள்ளது.

பொதுத்துறை வங்கிகளின் வீட்டுக் கடன்கள், நிறுவனக் கடன்கள் மற்றும் வாகன கடன்கள் போன்ற பல்வேறு துறைகளில் அதிகளவிலான கடன்களை கொடுத்துள்ளது மூலம் இந்தச வளர்ச்சி பதிவாகியுள்ளது. சொல்லப்போனால் பல துறையில் தனியார் துறையுடன் போட்டிப்போட்டு கடன்களை வழங்கி இந்த நிலையை அடைந்துள்ளது.
2025 நிதியாண்டின் முடிவில் பொதுத்துறை வங்கிகளின் கடன் வர்த்தக அளவு 98.2 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது, இது இந்திய வங்கிகளின் மொத்த கடன் சந்தையில் 52.3% பங்காகும். மறுபுறம், தனியார் வங்கிகளின் கடன் வர்த்தக அளவு 75.2 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது, இது 40% சந்தைப் பங்கை கொண்டுள்ளது.
கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் பொதுத்துறை வங்கிகள் இந்த ஆண்டு அதிகப்படியான கடன் வர்த்தகத்தை பெற்று இப்பிரிவில் 13.1% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது சாதனையாக பார்க்கப்படுகிறது. கடன் வர்த்தகத்தில் சுமார் 14 வருட தனியார் வங்கிகளின் அதிக்கத்தை பொதுத்துறை வங்கிகள் முறியடித்துள்ளது.
தனியார் வங்கிகளுக்கு சவால்: இந்தியாவில் பெரும்பாலான தனியார் வங்கிகள் உயர் மதிப்பீட்டைப் பெற்றிருந்தாலும், பொதுத்துறை வங்கிகளின் இந்த அதிரடியான வளர்ச்சி பெரும் சவாலாக மாறியுள்ளது. பெர்ன்ஸ்டைன் நிறுவனத்தின் இந்திய நிதி தலைவர் பிரணவ் கூறுகையில், "தனியார் வங்கிகள் ஒவ்வொரு வருடமும் சராசரியாக 6-7% அதிக வளர்ச்சியைப் பெற்று உயர் மதிப்பீடு பெற்றிருந்தன. ஆனால், வளர்ச்சி வித்தியாசம் குறையும்போது, அவற்றின் உயர் மதிப்பீடு பிரச்சனையாக மாறும்." என தெரிவித்துள்ளார்.
உதாரணமாக: ICICI வங்கியின் விலை-புத்தக (P/B) விகிதம் 3.5 ஆக உள்ளது, ஆனால் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா-வின் P/B விகிதம் 1.5 மட்டுமே. இது இரு வங்கிகளின் வளர்ச்சி வாய்ப்புகள், லாபம் போன்றவற்றின் சந்தை முதலீட்டாளர்களின் மாறுப்பட்ட கண்ணோட்டத்தை காட்டுகிறது. தனியார் வங்கி பங்குகளில் அதன் உண்மையான மதிப்பிபை தாண்டி முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் தயாராக உள்ளனர்.
மேலும் ரிசர்வ் வங்கி தரவுகள் மற்றும் பெர்ன்ஸ்டைன் ஆய்வுகளின் படி பார்க்கும் போது, 2011-ல் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் கடன் வளர்ச்சி வித்தியாசம் 4% ஆக இருந்தாக தெரிகிறது. இது 2016-ல் 20% உயர்ந்து, கோவிட் காலத்தில் மீண்டும் 4%-ஆக குறைந்தது. 2025-ல் மீண்டும் பொதுத்துறை வங்கிகள் முன்னிலை பெற்றுள்ளன. இந்த போட்டி, இந்திய வங்கித்துறையில் புதிய மாற்றத்தை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications