ஆன்லைன் மூலம் நடைபெறும் நிதி மோசடி உள்பட பல்வேறு மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இதுபற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவந்தாலும் மக்கள் தங்களது பேராசையால் இதுபோன்ற மோசடிப் பேர்வழிகளிடம் போய் சிக்கிக் கொள்ளவது இன்றைக்கும் தொடர்கதையாகவே உள்ளது.
பரிசுப் பொருட்களுக்கு ஆசைப்பட்டு தங்களது வங்கி விவரங்கள். கிரெடிட் கார்டு ரகசியத் தகவல்களை எளிதாக தந்து விடுகின்றனர். இதுதான் ஆன்லைன் மோசடிகள் நடைபெறுவதற்கு முக்கியக் காரணமாக விளங்குகிறது.

முதலீடுகளுக்கு அதிக லாபம், கைநிறைய சம்பளம், ஆன்லைன் வேலைவாய்ப்புகள் எனப் பல்வேறு ஆசைகாட்டிய குஜராத் மாநிலத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் மூன்றை மாதத்தில் மக்களிடமிருந்து ரூ.60 கோடியை ஏமாற்றி ஏப்பம் விட்டுள்ளனர்.
இருவரும் கல்லூரிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர்கள். மும்பையை சேர்ந்த ஒரு இளைஞர் ரூ.2.45 லட்சத்தை இழந்தது தொடர்பாக தந்த புகாரின் பேரில் 33 வயதான ரூபேஷ் பிரவிகுமார் தாக்கர், 34 வயதான பங்கஜ்பாய் கோவர்த்தன் ஓடு என்பவர்களை போலீஸார் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் அந்த இருவரது வங்கிக் கணக்கிலும் சேர்த்து ரூ.1.1 கோடி பணம் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அவர்களது வங்கிக் கணக்குகளை போலீஸார் முடக்கியுள்ளனர். மேலும் அவர்கள் பல பேரை ஏமாற்றி ரூ.60 கோடியை வசூலித்ததும் தெரியவந்துள்ளது.
இந்த இருவரும் கைது செய்யப்பட்ட போதிலும் இந்த நிதி மோசடிக்கான மூளையாக செயல்பட்ட தலைவன் போலீஸாரிடம் பிடிபடாமல் தலைமறைவாகியுள்ளான். அவனை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விசாரணையில் அவன் லண்டனில் பதுங்கியிருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
2023 அக்டோபர் மாதத்தில் 19 வயதான மாணவரான கிரிஷ் போலீஸாரிடம் ஒரு புகாரை அளித்தார். ஆன்லைனில் வேலைவாய்ப்பு பற்றிய தகவல் அறிந்து விண்ணப்பித்ததில் கிரிஷ்ஷுக்கு ரெஸ்ட்டாரண்ட்கள் பற்றிய ரிவ்யூக்களை எழுதுவதற்கான வேலை கிடைத்துள்ளது. இதற்கு அவருக்கு சம்பளமாக வாரத்துக்கு ரூ.10,000 தரப்படும் எனச் சொல்லப்பட்டது. மேலும் இந்த வேலையை ஒரு சில மணிநேரங்களுக்குப் பார்த்தால் போதும் என்றும் கூறப்பட்டது.

இதுதவிர தினசரி போனஸாக ரூ.3000 முதல் ரூ.5000 வரை அன்றைய தினமே வழங்கப்படும் என்றும் கிரிஷ்ஷுக்கு ஆசை வார்த்தைகள் கூறப்பட்டுள்ளது.
இந்த வார்த்தைகளை நம்பிய கிரிஷ் பல லட்சம் ரூபாயை இழந்துள்ளார்.
இவரைப் போல பலபேர் இந்த இரு இளைஞர்களிடம் ஏமாந்திருந்தாலும் யாரும் அது பற்றி புகார் கூறவில்லை. கிரிஷ்ஷின் புகாரை வைத்து இருவரையும் மும்பை போலீஸார் சாமர்த்தியமாகப் பிடித்து கைது செய்தனர்.


Click it and Unblock the Notifications