டாடா ஸ்டீல் மற்றும் APL அப்பல்லோ டியூப்ஸ் நிறுவனங்களுக்கு மத்தியில் இந்த வாரம் மிகப்பெரிய வர்த்தக இணைப்பு மற்றும் நிர்வாக கைமாற்றும் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த டீல் தொடர்பாக APL அப்பல்லோ டியூப்ஸ் நிறுவனத்தின் நிறுவன முதலீட்டாளர்களுக்குப் பாதகமாக இருப்பதாகப் புகார்கள் எழுந்த நிலையில் இதுகுறித்து பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி விவரங்களைக் கேட்டு விசாரிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் என்.சந்திரசேகரன் நியமனம் குறித்து டாடா டிரஸ்ட் அமைப்புகள் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது டாடா ஸ்டீல் நிறுவனத்தின் வர்த்தகம் குறித்துச் செபி ஆய்வு செய்ய உள்ளது.
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஸ்டீல் டியூப் மற்றும் பைப் வர்த்தகத்தையும், Tata Steel Colors நிறுவனத்தையும் மொத்தமாக 28,000 கோடி ரூபாய்க்கு APL Apollo Tubes நிறுவனத்திற்கு விற்பனை செய்துவிட்டு, அந்த நிறுவனத்தில் சுமார் 52.38 சதவீத பங்குகளை டாடா ஸ்டீல் வாங்க முடிவு செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு இரு தரப்பு நிர்வாக குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது.
ஜின்டால் ஸ்டீல் நிறுவனத்துடன் போட்டிப்போட்டு வரும் டாடா ஸ்டீல் நிறுவனத்தைப் பொறுத்த வரையில், ஸ்டீல் உற்பத்தியை தாண்டி தனது டவுன்ஸ்ட்ரீம் வர்த்தகத்தை வலுப்படுத்தவும், வர்த்தக சந்தையை விரிவாக்கம் செய்து, கூடுதலான ஸ்டீல் பொருட்களை சந்தைக்கு கொண்டு வர வேண்டும்.
இதை வேகமாக செய்து முடிக்க இப்பிரிவில் சிறந்து விளக்கும் சக போட்டி நிறுவனமான APL Apollo Tubes நிறுவனத்துடன் இணைந்துவிட்டு, அதன் நிர்வாகத்தை கைப்பற்றும் அளவுக்கான பங்குகளை வாங்கி டாடா ஸ்டீல்-ன் கிளை நிறுவனமாக இயக்க வேண்டும் என்பதே டாடா குழுமத்தின் திட்டம்.
இந்த நிலையில் APL அப்பல்லோ நிறுவனத்தின் ப்ரோமோட்டர்கள் அல்லாத முதலீட்டாளர்கள் இந்த ஒப்பந்தத்தின் தற்போதைய வடிவம் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அதாவது இந்த 52.38 சதவீத பங்கு கைமாற்றம் மூலம் நிர்வாகத்தை விட்டு வெளியேறும் புரோமோட்டருக்கு சாதகமாக இருந்தாலும் இந்நிறுவனத்தில் சிறுபான்மை பங்குதாரர்களுக்கு பாதகமாக இருப்பதாக கூறுகின்றனர்.
இதனால் டாடா ஸ்டீல் உடனான ஒப்பந்தத்தின் தற்போதைய வடிவத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்று APL அப்பல்லோ நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் APL அப்பல்லோ நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் செபிக்கு கடிதமும் அனுப்பியுள்ளனர், இரு நிறுவனங்களும் பங்குச்சந்தையில் இருக்கும் காரணத்தால் செபி நேரடியாக களத்தில் இறங்கி திட்ட வடிவத்தை விசாரணை செய்ய உள்ளது.


Click it and Unblock the Notifications
