மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட போர் சூழ்நிலை காரணமாக இந்திய பங்குச் சந்தையில் பெரும் சரிவை எதிர்கொண்டு உள்ளது. திங்கள்கிழமை வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே சென்செக்ஸ் 2,743 புள்ளிகள் சரிந்து 78,543 என்ற அளவில் திறந்தது. நிப்டி 519 புள்ளிகள் குறைந்து 24,659 என்ற அளவில் தொடங்கியது.
இன்றைய நாளின் இறுதியில் சென்செக்ஸ் 1,048 புள்ளிகள் சரிந்து 80,239-இல் முடிந்தது. நிப்டி 313 புள்ளிகள் குறைந்து 24,866-இல் நிறைவடைந்தது. இது ஒரு மாதத்துக்குப் பாதிவான குறைந்தபட்ச நிலை ஆகும்.

இந்த சரிவால் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பில் இருந்து ரூ.6.5 லட்சம் கோடிக்கு மேல் குறைந்துள்ளது. மொத்த சந்தை மதிப்பு ரூ.457 லட்சம் கோடி அளவுக்கு குறைந்துள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சரிவுக்கு முக்கிய காரணம் ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் தாக்ருதல் மற்றும் ஈரான் நாட்டின் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்ததாக வெளியான தகவல்கள். இது உலக சந்தைகளில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் ரூபாய் மதிப்பு பலவீனம் ஆகியவை முதலீட்டாளர் நம்பிக்கையை கூடுதலாக பாதித்துள்ளன.
கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியாவுக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் பெரும்பகுதியை இறக்குமதி செய்கிறது. இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு வர்த்தக பற்றாக்குறையை அதிகரிக்கும். ரூபாய் மதிப்பை குறைக்கும், பணவீக்கத்தை அதிகரிக்கும்.இது முழு பொருளாதாரத்தையும் பாதிக்கும்.
சென்செக்ஸ் குறியீட்டில் IndiGo, Larsen & Toubro, Adani Ports, Maruti Suzuki போன்ற நிறுவனங்கள் 3% முதல் 6% வரை சரிந்து அதிகப்படியான இழப்பை சந்தித்த நிறுவனங்களாக பட்டியலிடப்பட்டு உள்ளது. விமான சேவை மற்றும் கட்டுமான துறைகள் அதிக அழுத்தத்தை சந்தித்தன. மாறாக, பாதுகாப்பு துறையைச் சேர்ந்த Bharat Electronics பங்கு 2%க்கும் மேல் உயர்ந்து நாளின் முன்னணி உயர்வாளராக இருந்தது.
இந்த வாரம் சந்தையின் இயக்கம் முழுமையாக சர்வதேச சந்தையின் போக்கை மட்டுமே சார்ந்து இருக்கும். மத்திய கிழக்கில் பதற்றம் குறைந்தால் பங்குச்சந்தை மீள வாய்ப்பு உள்ளது. மேலும் போர் நீடித்தால் எண்ணெய் விலை மேலும் உயர்ந்து இந்திய சந்தைகளில் கூடுதல் அழுத்தம் உருவாகும் அபாயம் உள்ளது.
முதலீட்டாளர்கள் இந்த வாரம் உலக அரசியல் செய்திகளை மிக நெருக்கமாக கவனிக்க வேண்டியுள்ளது. கச்சா எண்ணெய் விலை, ரூபாய் நிலை, வெளிநாட்டு முதலீட்டு வெளியேற்றம் ஆகியவை சந்தையின் அடுத்த திசையை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளாக இருக்கும்.


Click it and Unblock the Notifications