சென்னை: இந்தியப் பங்குச்சந்தையில் தினமும் புதிய உச்சத்தை எட்டி வரும் வேளையில் இன்று நான்காவது நாள் தொடர் ஏற்றம் காரணமாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டு முதலீட்டாளர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் நாட்டின் முன்னணி ப்ளூ சிப் பங்குகளில் சிறப்பான முதலீட்டைப் பெற்ற நிலையில், நிப்டி (Nifty) குறியீடு 24,000 புள்ளிகளை நெருங்கியுள்ளது. சென்செக்ஸ் (Sensex) குறியீடு 300 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டு 79,000 புள்ளிகளைக் கடந்துள்ளது.

அமெரிக்கா முதல் ஆசியா வரையில் தற்போது பங்குச்சந்தை முதலீட்டுக்குச் சாதகமாக இருக்கும் வேளையில், இன்று காலை வர்த்தகம் துவங்கியது முதலே மும்பை பங்குச் சந்தையில் ஏற்றம் காணப்பட்டது.
குறிப்பாக, அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 23% பங்குகளை கையகப்படுத்திய செய்தி சந்தையில் பெரும் மாற்றத்தை உருவாக்கியது. அல்ட்ராடெக் சிமெண்ட் பங்குகள் 4% க்கும் மேல் உயர்ந்தன, இந்தியா சிமெண்ட்ஸ் பங்குகள் 13 சதவீதம் வரையில் உயர்ந்தது.
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை வர்த்தகத்தில் 300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 79033.91 புள்ளிகளை எட்டிய வரலாற்றுச் சாதனையை அடைந்தது. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் சரிவுக்குத் தள்ளப்பட்டது.
இதேபோல் நிஃப்டி குறியீடும் இன்று 23,974.70 புள்ளிகள் வரையில் உயர்ந்து 24000 புள்ளிகளுக்கு நெருங்கியது. இந்த 4 நாள் தொடர் உயர்வின் மூலம் நிஃப்டி வங்கி பங்குகள் 53000 புள்ளிகளை எட்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
நிப்டி குறியீட்டின் உயர்வுக்கு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி போன்ற முன்னணி நிறுவனங்களின் பங்குகள் முக்கிய பங்கு வகித்தன. இந்த நிறுவனங்களின் பங்குகளின் விலையில் ஏற்பட்ட கணிசமான உயர்வே, பங்குச் சந்தையின் ஏற்றத்திற்கு அடிப்படை காரணமாக அமைந்தது.
நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் குறியீடுகள் மட்டுமல்லாமல், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளிலும் ஏற்றம் காணப்பட்டது. மேலும் மும்பை பங்குச்சந்தையில் துறை ரீதியாகப் பார்க்கும்போது, வங்கி, FMCG, உலோகம் மற்றும் பார்மா நிறுவனப் பங்குகளில் அதிக அளவில் வாங்கப்பட்டது.
ஆனால் இது அனைத்தும் 11 மணியளவில் மாயமாகி சென்செக்ஸ் 50 புள்ளிகளுக்கு கீழும், நிஃப்டி 10 புள்ளிகளுக்கு கீழும் குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications