மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் 316.31 புள்ளிகள் சரிவில் 65,512.10 புள்ளிகளை எட்டியுள்ளது. நிஃப்டி குறியீடு 132.60 புள்ளிகள் சரிந்து 19,505.70 புள்ளிகளை எட்டியுள்ளது. சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் வெறும் 11 நிறுவனங்கள் மட்டுமே உயர்வுடன் உள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க பங்குச்சந்தையில் S&P 500 குறியீடு ஜூன் 1 ஆம் தேதிக்கு பின்பு மிகவும் மோசமான வகையில் செவ்வாய்க்கிழமை சரிந்துள்ளது. இதேபோல் டாவ் ஜோன்ஸ் ஜூன் மாதத்தில் இருந்து முதல் முறையாக சரிந்துள்ளது. நாஸ்டாக் மே 31 க்கு பின்பு அதிகமாக நேற்று சரிந்துள்ளது.

இந்த மோசமான சரிவுக்கு முக்கிய காரணம் அமெரிக்க மத்திய வங்கி பணவீக்கத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து வட்டி விகிதத்தை உயர்வாகவே வைக்க திட்டமிட்டு உள்ளதும், வேலைவாய்ப்பு தரவுகளை எதிர்பார்த்து காத்திருக்கும் சந்தைக்கு இது பெரும் பின்னடைவாக மாறியுள்ளது. இதனால் பெருமளவிலான முதலீடுகள் பத்திர சந்தைக்குள் நுழைந்தது.
இதன் எதிரொலியாக இன்று காலை வர்த்தகம் துவங்கிய உடன் சென்செக்ஸ் குறியீடு 500 புள்ளிகள் சரிந்து முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்தது. சென்செக்ஸ் குறியீடு தற்போது 448.24 புள்ளிகள் சரிந்து 65,063.86 புள்ளிகளை எட்டியுள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 132.05 புள்ளிகள் சரிந்து 19,396.70 புள்ளிகளை எட்டியுள்ளது.
இன்று காலை வர்த்தகத்தில் FMCG துறையை தவிர அனைத்து வர்த்தக துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இது விழாக்காலம் என்பதால் மக்கள் நுகர்வோர் பொருட்களை அதிகளவில் வாங்குவார்கள் என்ற காரணத்தாலும், அடுத்த 2 மாதம் பண்டிகை காலம் என்பதாலும் இத்துறை பங்குகள் உயர்வுடன் காணப்படுகிறது. இதில் முக்கியமாக அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் பங்குகள் 2.5 சதவீதம் உயர்வுடன் துவங்கியது.
சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் நெஸ்லே, ஹெச்டிஎப்சி வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐடிசி பங்குகள் உயர்வுடன் இருந்தது குறிப்பிடத்தக்கது. மறுமுனையில் பஜாஜ் பின்சர்வ், ஆக்சிஸ் வங்கி, இன்டஸ்இந்த் வங்கி ஆகியவை 2 - 3 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
மேலும் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 4 பைசா சரிந்து 83.24 ரூபாயாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications