உலக நாடுகளில் மீண்டும் அதிகரித்து வரும் பொருளாதார மந்தநிலை மூலம் புதன்கிழமை வர்த்தகத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் அதிகப்படியான முதலீட்டு வெளியேற்றம் மூலம் சென்செக்ஸ் 350 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது.
அமெரிக்க சந்தையில் பத்திர முதலீட்டின் மீதான முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் பங்குச்சந்தையில் முதலீடு குறைந்துள்ளது, இது கிட்டத்தட்ட முன்னனி பொருளாதார நாடுகள் அனைத்திலும் இருக்கும் நிலை என்பதால் இந்திய சந்தையும் இன்று அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

இன்று காலை வர்த்தகத்தில் பிஎஸ்இ சென்செக்ஸ் குறியீடு 364 புள்ளிகள் சரிந்து அதாவது 0.55% குறைந்து 65,580 புள்ளிகளை அடைந்தது. இதேபோல் நிஃப்டி குறியீடு 100 புள்ளிகள் வரையில் சரிந்து அதாவது 0.51% வரை குறைந்து 19,563 புள்ளிகளில் வர்த்தகமாகி, தற்போது கணிசமாக மீண்டுள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 பங்குகளில் டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை அதிக நஷ்டமடைந்தன. கிட்டத்தட்ட 12 நிறுவனங்கள் தற்போது பெரும் சரிவில் மாட்டிக்கொண்டு உள்ளது.
இதனிடையில் அனில் அகர்வால் நிறுவனமான வேதாந்தா குழுமத்தின் கார்ப்பரேட் குடும்ப மதிப்பீட்டை மூடிஸ் நிறுவனம் Caa1 இலிருந்து Caa2 ஆகக் குறைத்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து வேதாந்தா பங்குகள் கிட்டத்தட்ட 6% குறைந்தன. மேலும் Borosil Renewables பங்குகள் இன்று 9% வரை உயர்ந்தது, இதற்கு முக்கிய காரணம் 19.53 கோடி ரூபாய்க்கான வரிக் கோரிக்கையை இந்திய நீதிமன்றம் ரத்து செய்தது தான்.
இன்றைய வர்த்தகத்தில் துறை வாரியாக பார்க்கும் போது நிஃப்டி மெட்டல் 0.95% சரிந்தது, வேதாந்தா, ஹிந்துஸ்தான் காப்பர் மற்றும் ஜிண்டால் ஸ்டீல் ஆகியவை அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டது. மேலும் நிஃப்டி பேங்க், நிஃப்டி ஐடி மற்றும் நிஃப்டி பைனான்சியல் சர்வீசஸ் ஆகியவையும் சரிவுடன் துவங்கியது, நிஃப்டி பார்மா மற்றும் நிஃப்டி ரியாலிட்டி ஆகியவை உயர்வுடன் துவங்கியது.
12 மணியளவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு வெறும் 69.95 புள்ளிகள் சரிந்து 65,875.82 புள்ளிகளை எட்டியுள்ளது. மேலும் நிஃப்டி குறியீடு 15.20 புள்ளிகள் சரிந்து 19,649.50 புள்ளிகளை எட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications