பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு 2024 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பாக இருக்கும் என 2023 ஆம் ஆண்டில் பதிவான வரலாற்று உச்ச அளவீடுகளைக் கொண்டு கூறப்பட்டாலும், பிப்ரவரி 1 ஆம் தேதி மோடி அரசின் இடைக்காலப் பட்ஜெட் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 6வது முறையாகத் தாக்கல் செய்ய உள்ளார்.
இதோடு அடுத்த சில மாதத்தில் பொதுத் தேர்தல் நடக்க இருக்கும் காரணத்தால் இந்த ஆண்டுப் பங்குச்சந்தை அதிகப்படியான தடுமாற்றத்தை எதிர்கொள்ள வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படும் வேளையில், வருடத்தின் ஆரம்பத்திலேயே இதன் எதிரொலி வெடிக்கத் துவங்கியுள்ளது.

ஜனவரி 1 ஆம் தேதி வர்த்தக முடிவில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு வெகுசில புள்ளிகள் மட்டுமே உயர்ந்த நிலையில் இன்று சென்செக்ஸ் 600 புள்ளிகள் வரையில் சரிந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு ஆரம்பத்தில் இருந்து தொடர் சரிவை எதிர்கொண்டு வரும் வேளையில் 12 மணியளவில் 554.50 புள்ளிகள் சரிந்து 71,717.44 புள்ளிகளை அடைந்துள்ளது. இதன் மூலம் சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் சன் பார்மா, பஜாஜ் பைனான்ஸ், பார்தி ஏர்டெல், பஜாஜ் பின்சர்வ், எஸ்பிஐ, பவர்கிரிட் ஆகியவை உயர்வுடன் உள்ளது.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, அல்ட்ராடெக், எல் அண்ட் டி, விப்ரோ ஆகியவை 2 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை எதிர்கொண்டு உள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு இன்று காலை வர்த்தகத்தில் அதிகப்படியாக 21,555.65 புள்ளிகள் வரையில் சரிந்திருக்கும் வேளையில் தற்போது 104.50 புள்ளிகள் சரிந்து 21,637.40 புள்ளிகளை எட்டியுள்ளது.
பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அறிக்கை இடைக்காலப் பட்ஜெட் என்பதால் அதிரடியாகத் திட்டங்களும், நிதி ஒதுக்கீடுகளும் இருக்க வாய்ப்புகள் குறைவு. இதேபோல் பொதுத் தேர்தலில் மோடி அரசு பெரும்பான்மை உடன் வெற்றி அடையாவிடில் பங்குச்சந்தை 20- 25 சதவீதம் வரையில் சரியும் எனப் பல கணிப்புகள் வெளியாகியுள்ளது.
இப்படியிருக்கும் வேளையில் 2024 ஆம் ஆண்டுத் துவக்கத்திலேயே பங்குச்சந்தை சரிவுடன் துவங்கியிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பங்குச்சந்தை சரிவுக்கு உள்நாட்டுக் காரணிகள் மட்டும் அல்லாமல் சர்வதேச சந்தை சூழ்நிலைகளும் முக்கியக் காரணமாக உள்ளது.
சீனாவின் பொருளாதார வளர்ச்சி தரவுகள் கலவையாக உள்ளது, உற்பத்தி துறை வளர்ச்சி குறைந்திருக்கும் வேளையில், தனியார் துறை வளர்ச்சிப் பாதையில் உள்ளது. இதேவேளையில் ஜப்பான் நாட்டில் நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை, அமெரிக்கப் பங்குச்சந்தையின் விடுமுறை ஆகியவையும் இந்திய பங்குச்சந்தை வர்த்தகத்தைப் பாதித்துள்ளது.


Click it and Unblock the Notifications