மும்பை பங்குச்சந்தை 5 நாட்களாகத் தொடர்ந்து சரிந்து முதலீட்டாளர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5 வர்த்தக நாளில் மட்டும் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சுமார் 3,817.4 புள்ளிகள் சரிந்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் சரிவை பயன்படுத்திக்கொண்டு தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டுமா..? இல்லை வர்த்தகச் சூழ்நிலை சீராகும் வரையில் காத்திருந்து முதலீடு செய்ய வேண்டுமா..? என்பது தான் தற்போது அனைத்து ரீடைல் முதலீட்டாளர்களின் கேள்வியாக உள்ளது.
ரூ.18 லட்சம் கோடி இழப்பு.. மிக மோசமான வீழ்ச்சி கண்ட சென்செக்ஸ், நிஃப்டி.. நல்வாய்ப்பா?

சென்செக்ஸ், நிஃப்டி
சென்செக்ஸ் குறியீடு இன்று அதிகப்படியாக 2040 புள்ளிகள் சரிந்துள்ளது. இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 1,545.67 புள்ளிகள் சரிந்து 57,491.51 புள்ளிகளை அடைந்துள்ளது. நிஃப்டி குறியீடு 468.05 புள்ளிகள் அதிகரித்து 17,149.10 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் நிறைவடைந்துள்ளது.

5 நாள் தொடர் சரிவை
கடந்த 5 நாள் வர்த்தகத்தில் தொடர்ந்து சரிவை பதிவு செய்துள்ள காரணத்தால் சென்செக்ஸ் 3800 புள்ளிகளும், நிஃப்டி 1100 புள்ளிகளும் சரிந்துள்ளது. இதேவேளையில் நிஃப்டி ஸ்மால் கேப் 100 மற்றும் நிஃப்டி மிட் கேப் 100 குறியீடு 2022ல் பெரும் சரிவை பதிவு செய்துள்ளது.

வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்கள்
இந்தச் சரிவுக்கு மிகவும் முக்கியமாகக் காரணம் வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீட்டை வெளியேற்றி வருவது தான். தற்போது இருக்கும் வர்த்தக சூழ்நிலையில் முக்கியமான வர்த்தகப் பிரிவான ரியல் எஸ்டேட், உலோகம், நிஃப்டி ஸ்மாக்கேப், மிட்கேப், ஐடி, வங்கி மற்றும் நிதியியல் துறைகள் சரிவுடன் இருக்கும் காரணத்தால் அடுத்தச் சில நாட்களுக்குச் சந்தை தொடர்ந்து சரிவுடனே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐடி துறை பங்குகள்
ஐடி துறை பங்குகள் சரிவில் இருந்து மீண்டு வர டிசிஎஸ் நிறுவனத்தின் பைபேக் திட்டம் பெரிய அளவில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஐடி பங்குகள் முழுமையாக மீண்டு வரவில்லை என்றாலும் கட்டாயம் சரிவில் பாதையைத் தடுக்கலாம்.

பாதுகாப்பான முதலீடு
தற்போது இருக்கும் சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பாக முதலீடு செய்வதே சரியானதாக இருக்கும், தற்போது இருக்கும் சூழ்நிலையில் மத்திய பட்ஜெட், அமெரிக்காவின் நாணய கொள்கை கூட்டம், பணவீக்கம் ஆகியவற்றில் கருத்தில் கொண்டு ரிஸ்க் இல்லாத நிறுவனத்தில் முதலீடு செய்வது உத்தமம்.

நம்பிக்கை
மேலும் நிஃப்டி குறியீட்டுக்கு 17,000 முதல் 17,100 புள்ளிகளிலும், வங்கி நிஃப்டி குறியீட்டில் 36,500 முதல் 36,700 புள்ளிகளிலும் அதிகப்படியான சப்போர்ட் இருக்கும் காரணத்தால் கட்டாயம் இந்தச் சரிவில் இருந்து மும்பை பங்குச்சந்தை மீண்டு வர வாய்ப்பு உள்ளது எனச் சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர்.