சென்னை: இந்தியாவை அடுத்த 5 வருடம் ஆளப்போவது யார் என்ற கேள்விக்கு அடுத்த சில நாட்களில் பதில் வெளியாக இருக்கும் வேளையில், பல முதலீட்டு நிறுவனங்கள், சந்தை ஆய்வாளர்கள் தேர்தல் முடிவுகளைப் பங்குச்சந்தையை எப்படி பாதிக்கும் என்பது குறித்து பல கணிப்புகளை வெளியிட்டு உள்ளனர்..
இந்த கணிப்புகளில் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், 2024 பொதுத் தேர்தலில் NDA கூட்டணி வெற்றி பெறுவது மட்டும் அல்லாமல் BJP பெரும்பான்மை உடன் வெற்றி பெற்றால் மட்டுமே பங்குச்சந்தை சரிவில் இருந்து தப்பிக்கும் என்பது தான்.

BJP தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்க முடியாமல், NDA கூட்டணியில் ஆட்சி அமைந்தாலும் சரி, INDIA கூட்டணி வெற்றிபெற்றாலும் சரி பங்குச்சந்தை சரியும் என கணிப்புகள் வெளியாகியுள்ளது. இதன் வாயிலாகவே கடந்த 5 நாட்களாக சென்செக்ஸ், நிஃப்டி தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், இன்று திடீரென உயர்ந்துள்ளது.
இந்த திடீர் உயர்வுக்கும், நாளை நடக்கும் இறுதிக்கட்ட தேர்தலுக்கும் தொடர்பு இருந்தாலும், இன்றைய உயர்வுக்கு முக்கியமான காரணம் அமெரிக்கப் பொருளாதார தரவுகளும், அதன் மூலம் ஏற்பட்ட ஆசியச் சந்தை வர்த்தக உயர்வும் தான் முக்கிய காரணம்.
அமெரிக்கப் பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்த போதிலும், ஆசியப் பங்குச்சந்தைகள் இன்று (மே 31, 2024) உயர்வுடன் காணப்பட்டன. அமெரிக்காவின் மார்ச் காலாண்டு பொருளாதார தரவுகள், சந்தை கணிப்பான 1.6 சதவீதத்தைத் தொட முடியாத நிலையில் 1.3 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.
இதன் மூலம் அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்து வருவதைக் காட்டுவதால், வட்டி விகிதங்களைக் குறைக்க அமெரிக்க மத்திய வங்கி (Federal Reserve) முடிவெடுக்கும் என்ற எதிர்பார்ப்பே இதற்குக் காரணமாக இருக்கலாம்.
இதேவேளையில் அமெரிக்கப் பங்குச்சந்தை சரிவுக்கு மிக முக்கியமான காரணம் அந்நாட்டின் டெல் உட்பட பல பிரபல நிறுவனங்களின் வர்த்தக இழப்பு, மந்தமான காலாண்டு முடிவுகள் தான். ஆனால் வட்டி விகித குறைப்பு என்பது ஆசியச் சந்தைக்குச் சாதகமாக அமைந்துள்ளது.
ஆசியப் பங்குச்சந்தைகளில் இன்று காலை ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் பங்குச்சந்தைகள் உயர்வுடன் காணப்பட்டன. ஹாங்காங் பங்குச்சந்தை Equity Futures உயர்வுடன் இருந்தன.
ஆனால், டெல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் வருவாய் அதிகரிப்பு முதலீட்டாளர்களைக் கவரத் தவறியதால், அமெரிக்கப் பங்குச்சந்தை எதிர்கால ஒப்பந்தங்கள் சரிவில் இருந்தன.
இதோடு நாஸ்டாக்-ல் பட்டியலிடப்பட்டுள்ள சீனப் பங்குகளின் குறியீடான கோல்டன் டிராகன் இன்டெக்ஸ் (Golden Dragon Index) நேற்று (மே 30, 2024) 1% க்கும் மேல் உயர்ந்தது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.
எண்ணெய் விலை வீழ்ச்சி: ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருக்கும் OPEC+ கூட்டத்திற்கு முன்னதாக, சந்தையில் அதிக எண்ணெய் இருப்பு இருக்கும் காரணமாக, மூன்றாவது நாளாகக் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது.
ஆகஸ்ட் டெலிவரிக்கான கச்சா எண்ணெய் விலை (Brent crude) ஒரு பீப்பாய்க்கு $82 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய (மே 30, 2024) 1.9% சரிவு. அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 78 டாலருக்கும் குறைவாக இருந்தது.


Click it and Unblock the Notifications