இந்திய பங்குச்சந்தை பக்ரீத் விடுமுறையை தொடர்ந்து வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று துவங்கும் போதே அதிரடியான உயர்வுடன் துவங்கியது. இதற்கு முக்கியமான காரணம் அமெரிக்க பொருளாதார தரவுகள், எப்போது அமெரிக்கா ரெசிஷனுக்குள் நுழையும், எப்போது பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற பல கேள்விகளுக்கு முதலீட்டு சந்தைக்கு சாதகமான பதில் தற்காலிகமாக கிடைத்துள்ளது.
அமெரிக்காவின் பொருளாதாரம் முதல் காலாண்டில் உயர்வுடன் காணப்படுகிறது, வேலையில்லாதோர் எண்ணிக்கையில் சரிவு, பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தும் நெருக்கடியில் தளர்வு ஆகியவை அந்நாட்டு பொருளாதாரம் ரெசிஷன் அச்சம் கணிசமாக குறைந்துள்ளது.

இதன் வாயிலாக அமெரிக்க சந்தையில் மட்டும் அல்லாமல் இந்திய பங்குசந்தையிலும் முதலீடுகள் அதிகரிக்க துவங்கியுள்ளது. அமெரிக்க பொருளாதாரத்தின் மீதான ரெசிஷன் அச்சம் கணிசமாக குறைந்துள்ள காரணத்தால் ஐடி துறை நிறுவனங்கள் மீதான முதலீடுகளும் அதிகரித்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு புதிய வரலாற்று உச்ச அளவான 64414.84 புள்ளிகளை எட்டியுள்ளது, இதேபோல் நிஃப்டி குறியீடு 19108.20 புள்ளிகள் என்ற வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் அதிகப்படியாக ஐடி சேவை நிறுவனங்கள் மீது அதிக முதலீடு குவிந்துள்ளது, இன்போசிஸ் பங்குகள் இன்று 2.49 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
இதை தொடர்ந்து மதிய வர்த்தகத்தில் ஐரோப்பிய சந்தையும் கைகொடுத்த காரணத்தால் சென்செக்ஸ் 64616.6 புள்ளிகள் வரையில் உயர்ந்து ஓரே நாளில் புதிய உச்ச அளவீட்டை பதிவு செய்துள்ளது. அடுத்த காலாண்டில் சென்செக்ஸ் பென்ச்மார்க் அளவு 65000 புள்ளிகளாக உயரவும் வாய்ப்பு உள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் இன்போசிஸ், மாருதி சுசூகி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டிசிஎஸ் ஆகியவை 2 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இன்டஸ்இந்த் வங்கி, சன் பார்மா, டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக், டாடா மோட்டார்ஸ், விப்ரோ, ஹெச்டிஎப்சி ஆகியவை 1 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது.
இதேவேளையில் என்டிபிசி, டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல், ஹிந்துஸ்தான் யூனிலீவர், கோட்டாக் மஹிந்திரா, ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி ஆகிய நிறுவன பங்குகள் சரிவில் உள்ளது. நிஃப்டியில் அனைத்து துறை குறியீடுகளும் அதிகமாக வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. ஆனால் எப்எம்சிஜி, மெட்டல் ஆகிய துறை சார்ந்த குறியீடுகள் மட்டுமே சரிவு பதிவு செய்துள்ளது.
இன்றைய வர்த்தக உயர்வுக்கு முக்கிய காரணம் அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்டு உள்ள மாற்றம் தான்.


Click it and Unblock the Notifications