சென்னை: பக்ரீத் விடுமுறையைத் தொடர்ந்து இன்று பங்குச்சந்தை திறக்கப்பட்ட நிலையில், எதிர்பார்த்தபடியே உயர்வுடன் துவங்கியது மட்டும் அல்லாமல் வரலாற்று உச்ச அளவீட்டைத் தொட்டு உள்ளது.
ஆசியப் பங்குச் சந்தைகளின் ஏற்றத்தைத் தொடர்ந்து, இந்தியப் பங்குச் சந்தையின் முன்னணி குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி 50 குறியீடுகள் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் புதிய உயர்வுடன் தொடங்கின.

இன்றைய வர்த்தகத்தில் IT துறை பங்குகளின் விலை உயர்வே இதற்கு முதன்மை காரணமாக இருந்தது. இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் அடுத்தடுத்து திட்டங்களைப் பெறுவது மட்டும் அல்லாமல் ஐரோப்பிய மத்திய வங்கி வட்டியைக் குறைத்தது மூலம் புதிய வர்த்தகம் வருவது அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
இதன் எதிரொலியாகச் செவ்வாய்க்கிழமை காலை 9:21 மணி நிலவரப்படி, மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் குறியீடு 208 புள்ளிகள் அதாவது 0.26% உயர்ந்து 77,196 என்ற புள்ளியில் வர்த்தகமாகிக் கொண்டிருந்தது. தேசிய பங்குச் சந்தை (NSE) நிப்டி 50 குறியீடு 69 புள்ளிகள் அதாவது 0.30% உயர்ந்து 23,534 என்ற புள்ளியில் வர்த்தகமாகிக் கொண்டிருந்தது.
இன்று வர்த்தகம் துவங்கி முதல் 3 நிமிடத்திலேயே சென்செக்ஸ் 77347.58 புள்ளிகளைத் தொட்டும், நிஃப்டி 23,573.85 புள்ளிகளைத் தொட்டும், புதிய வரலாற்று உச்சத்தை அடைந்துள்ளது.
காரணங்கள் என்ன?: இன்றைய பங்குச்சந்தை உயர்வுக்கு உள்நாட்டு நிலவரத்தைக் காட்டிலும் உலகளாவிய பங்குச் சந்தைகளில் இருந்து வரும் சாதகமான சிக்னல் தான் இந்தியப் பங்குச் சந்தையின் ஏற்றத்திற்கு முக்கிய பங்கு வகித்தன.
உதாரணமாக அமெரிக்க பங்குச் சந்தையில் திங்கட்கிழமை வர்த்தகத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் S&P 500 மற்றும் நாஸ்டாக் சாதனை உயர்வை எட்டியது. ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்தைகளும் இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் ஏற்றத்துடன் தொடங்கின.
எந்த துறை பங்குகள் அதிகம் உயர்ந்தன?: அமெரிக்கப் பங்குச்சந்தையின் சாதனை உயர்வைத் தொடர்ந்து இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப (IT) துறை பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் முக்கிய இடத்தை தொட்டு வருகிறது. TCS, Infosys, Wipro போன்ற முன்னணி ஐடி நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகப்படியான உயர்வைப் பதிவு செய்துள்ளது.
இனி என்ன?: இந்தியப் பங்குச் சந்தை தொடர்ந்து உயருமா என்பது, உலகளாவிய சந்தைகளின் போக்கு, எண்ணெய் விலை நிலவரம், உள்நாட்டுப் பொருளாதார தரவுகள் போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்தே இருக்கும்.


Click it and Unblock the Notifications