இந்திய பங்குச்சந்தை இன்று கிட்டத்தட்ட 1 சதவீதம் உயர்ந்து, சென்செக்ஸ் குறியீடு 1,000 புள்ளிகளுக்கும் மேலாக அதிகரித்து, நிஃப்டி குறியீடு முதன்முதலாக 22,900 என்ற அளவைக் கடந்தது முதலீட்டாளர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது,.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு அதிகப்படியாக 75,407.39 புள்ளிகளை எட்டியது. இதற்கு முன்னர் மே 3ஆம் தேதி 75,095.18 என்ற அளவைத் தொட்டது குறிப்பிடத்தக்கது. தேசிய பங்குச்சந்தை (NSE) நிஃப்டி 50, மதிய வர்த்தகத்தின் போது 22,959.70 என்ற வரலாற்று உச்ச அளவீட்டைத் தொட்டது.

இந்த இரண்டு முக்கிய பங்குச்சந்தை குறியீடுகளின் இந்த அதிரடி உயர்வுக்கு முக்கியமான காரணம் இந்திய ரிசர்வ் வங்கி-யின் நிர்வாகக் குழு புதன்கிழமை வெளியிட்ட முக்கியமான அறிவிப்பு தான்.
2023-24 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசுக்கு ரூ.2.11 லட்சம் கோடி அளவிலான டிவிடெண்ட் தொகையை அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இது இந்திய வரலாற்றில் மிகவும் அதிகப்படியான தொகை என்பது மட்டும் அல்லாமல் 1 லட்சம் கோடி ரூபாய் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட இடத்தில் 2.11 லட்சம் கோடி கொடுக்கும் அளவுக்கு நாட்டின் பொருளாதாரம் இருப்பதாலேயே இந்த தொகையைப் பகிர்ந்துள்ளது.
இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நாளே அதாவது இன்று மே 23 ஆம் தேதி பங்குச்சந்தை தடாலடியாக உயர்ந்து நிஃப்டி வரலாற்று உச்ச அளவீட்டைத் தொட்டு உள்ளது. அது சரி ஆர்பிஐ, மத்திய அரசுக்குக் கொடுக்கும் பணத்திற்கும் பங்குச்சந்தை உயர்வுக்கும் என்ன தொடர்பு..?
இந்த "பம்பர் பேஅவுட்" (bumper payout), 2025ஆம் நிதியாண்டில் மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை அளவை 0.2 முதல் 0.4 சதவீதம் வரையிலான வரம்பில் குறைக்க மத்திய அரசுக்குச் சூழ்நிலையை உருவாக்கக் கூடும் என்று சந்தை நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்த ரிசர்வ் வங்கியின் ரூ.2.11 லட்சம் கோடி டிவிடெண்ட் பகிர்வு, மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.1.02 லட்சம் கோடி தொகையை விட அதிகமாகும்.
கோடக் இன்ஸ்டிடியூஷனல் அறிக்கையின் படி, ஆர்பிஐ அளித்துள்ள டிவிடென்ட் தொகையை மூலம் மத்திய அரசின் நிதி இலக்குகளை அடைவது மிகவும் எளிதாகிவிடும். இதனால் அரசு சாலைகள், ரயில்வே மற்றும் பாதுகாப்பு போன்றவற்றுக்கு ஒதுக்கீடுகளை அதிகரிப்பதன் மூலம் உள்கட்டமைப்பு (capex) செலவுகளைத் தொடர்ந்து அதிகரிக்க முடியும்.
இதன் தான் இன்றைய பங்குச்சந்தை உயர்வுக்கு முக்கியமான காரணமாகும். இந்த உபரி நிதியால் மத்தியில் யார் ஆட்சி அமைத்தாலும் capex துறையில் அதிகப்படியான முதலீட்டைச் செய்ய முடியும். இதனாலேயே பங்குச்சந்தை தடாலடியாக உயர்ந்துள்ளது
அதானி எண்டர்பிரைசஸ், ஆக்சிஸ் வங்கி, லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட், அதானி போர்ட்ஸ் மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா ஆகியவை என்எஸ்இ நிறுவனங்களில் அதிக லாபம் ஈட்டின.


Click it and Unblock the Notifications