இந்திய பங்குச்சந்தை திங்கட்கிழமை காலை முதல் சரிவில் தத்தளித்து வந்த நிலையில், வர்த்தகம் முடியும் நேரத்தில் தடாலடியாக உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு ஷாக் கொடுத்தது. ஈரான் - அமெரிக்கா போர் தாண்டி, தைவான் சுற்றி சீனா செய்த போர் ஒத்திகைகள் போர் பதற்றங்கள் தொடர்ந்து நிலவி வந்தாலும், வங்கி, நிதி சேவை, ஆட்டோமொபைல் மற்றும் நுகர்வோர் பொருட்கள் துறைகளில் உருவான அதிகப்படியான முதலீடு சந்தையை உயர்த்தியது. குறிப்பாக பெரிய நிறுவன பங்குகளில் முதலீட்டாளர்கள் அதிகமாக முதலீடு செய்த காரணத்தால் சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் முடிந்தன.
இந்த நிலையில் சென்செக்ஸ் 939 புள்ளிகள் உயர்ந்து 75,502.85 என்ற நிலையில் முடிந்தது. அதேபோல் நிஃப்டி 50 258 புள்ளிகள் அல்லது 1.11 சதவீதம் உயர்ந்து 23,408.80 என்ற அளவில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

சென்செக்ஸ் இன்றைய வர்த்தகத்தில் இன்டராடே குறைந்த நிலையான 73,949.76 இலிருந்து சுமார் 1,553 புள்ளிகள் உயர்ந்தது. அதேபோல் நிஃப்டி 50 குறைந்த நிலையான 22,955.25 இலிருந்து 450 புள்ளிகளுக்கும் அதிகமாக, அதாவது சுமார் 2 சதவீதம் உயர்ந்தது. இந்த திடீர் வளர்ச்சி முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்ட மாற்றத்தைக் காட்டுகிறது.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி உயர முக்கிய காரணம் பெரிய நிறுவன பங்குகளில் உருவான திடீர் முதலீடு. குறிப்பாக HDFC Bank, ICICI Bank, Reliance Industries, மற்றும் State Bank of India போன்ற முக்கிய பங்குகள் அதிகப்படியான முதலீடுகள் குவிந்தன.
இந்த பெரிய நிறுவனங்கள் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகளில் அதிக எடையைக் கொண்டிருப்பதால், இந்நிறுவன பங்குகளில் உருவான முதலீடு தான் சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுக்கு முக்கியமான காரணமாக இருந்து வருகிறது.
மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப்
சென்செக்ஸ், நிஃப்டி உயர்ந்திருந்தாலும், சந்தை முழுவதும் அதே போக்கு காணப்படவில்லை. குறிப்பாக மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் சரிவுடனே முடிந்தன. BSE 150 Midcap Index 0.42 சதவீதம் சரிந்தது. அதேபோல் BSE 250 Smallcap Index 0.47 சதவீதம் குறைந்தது.
இதன் காரணமாக, பங்குச்சந்தையின் மொத்த மதிப்பில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு சுமார் ரூ.430 லட்சம் கோடி அளவில் நிலைத்தது நிற்கிறது.
தற்காலிக உயர்வு
இன்றைய சந்தை தற்காலிகமாக மீண்டிருந்தாலும், பல்வேறு வெளிப்புற காரணிகள் இன்னும் முதலீட்டாளர்களை சோகத்தில் வைத்துள்ளன. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் சூழ்நிலை காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. இதனால் உலகளாவிய எரிபொருள் சந்தையில் சுமையாக மாறி வருகிறது.
மேலும் இந்த சூழ்நிலையில் Strait of Hormuz பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தை நேரடியாக பாதிக்கக்கூடும். இந்த பகுதியில் பதற்றம் குறைந்தால் சந்தைக்கு கூடுதல் ஆதரவு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
முக்கிய சவால்கள்
இந்திய பங்குச்சந்தை தற்போது எதிர்கொள்ள வேண்டிய முக்கிய சவால்களில் ரூபாய் மதிப்பு குறைவு, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீட்டு வெளியேற்றமும் முக்கியமானது. ரூபாய் பலவீனமாக இருப்பதும், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பதும் இந்திய பொருளாதாரத்திற்கு பெரும் ஆபத்தாக உள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து பணத்தை வெளியே எடுத்தால் சந்தை மீட்பு நீண்ட காலம் நிலைத்திருக்காது என்ற கவலையும் உள்ளது.
மொத்தத்தில், திங்கட்கிழமை இந்திய பங்குச்சந்தை வலுவான மீட்சியை பதிவு செய்தாலும், இந்த உயர்வு பெரிய நிறுவன பங்குகளில் பதிவான முதலீடுகளால் மட்டுமே ஏற்பட்டது. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளில் தொடர்ந்து விற்பனை அழுத்தம் காணப்படுகிறது. இதனால் இன்றைய உயர்வு ஒரு தற்காலிக உயர்வாகவே இருக்கும்.


Click it and Unblock the Notifications