செப்டம்பர் காலாண்டு முடிந்துள்ள நிலையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இந்த 3 மாத காலக்கட்டத்தில் வெறும் 1.7 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 4 வருடத்தில் மிகவும் மோசமான வகையில் முடிந்த காலாண்டாக உள்ளது, இது பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சென்செக்ஸ் குறியீடு 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் காலாண்டில் 8.3 சதவீதமும், 2021ல் 13 சதவீதம் வளர்ச்சி அடைந்த நிலையில், தற்போது வெறும் 1.7 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. கடைசியாக 2019 செப்டம்பர் காலாண்டில் சென்செக்ஸ் 1.9 சதவீதம் சரிந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டிசம்பர் காலாண்டின் முதல் வர்த்தக நாளான அக்டோபர் 3 ஆம் தேதி பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் பெரும் நம்பிக்கை உடன் வர்த்தகத்தை துவங்கிய நிலையில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகத்தில் 440 புள்ளிகள் வரையில் சரிந்து அதிர்ச்சி கொடுத்தது.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 316.31 புள்ளிகள் சரிவில் 65,512.10 புள்ளிகளை எட்டியுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் அதிகப்படியாக 65,344.59 புள்ளிகள் வரையில் சரிந்தது குறிப்பிடத்தக்கது. சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் வெறும் 11 நிறுவனங்கள் மட்டுமே உயர்வுடன் உள்ளது.
இதில் அதிகப்படியாக பஜாஜ் பைனான்ஸ் பங்குகள் 2.04 சதவீதம் வரையில் உயர்ந்தது, எல் அண்ட் டி, டைட்டன், பஜாஜ் பின்சர்வ் ஆகியவை 1 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது. சரிவடைந்த நிறுவனங்கள் பட்டியலில் மாருதி சுசூகி முதல் இடத்தில் சுமார் 2.46 சதவீதம் சரிந்துள்ளது. மேலும் என்டிபிசி, டாடா மோட்டார்ஸ், சன் பார்மா, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்சிடிஎப்சி வங்கி பங்குகள் அதிகளவிலான சரிவை எதிர்கொண்டு உள்ளது.
மேலும் நிஃப்டி குறியீடு 132.60 புள்ளிகள் சரிந்து 19,505.70 புள்ளிகளை எட்டியுள்ளது. நிஃப்டி 50 குறியீட்டில் அதிகம் சரிந்த நிறுவனங்கள் பட்டியலில் ONGC, எய்ச்சர் மோட்டார்ஸ், ஹிண்டால்கோ, மாருதி சுசூகி, டாக்டர் ரெட்டிஸ் பங்குகள் உள்ளது. இவை அனைத்தும் 2 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்துள்ளது.
இன்றைய சரிவுக்கு முக்கிய காரணமாக விளங்குவது 2வது காலாண்டு முடிவுகள் மந்தமாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளதும், அன்னிய முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டை அமெரிக்க பத்திர சந்தையில் அதிகப்படியாக முதலீடு செய்வதும் தான். இந்த நிலைக்கு தள்ளப்பட முக்கியமான காரணம் பணவீக்கம், கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை தான்.


Click it and Unblock the Notifications