உலகளவில் பிரபலமான மற்றும் பில்லியனர் முதலீட்டாளர் மார்க் மொபியஸ் இந்திய பங்குச் சந்தையின் எதிர்காலம் குறித்து உறுதியாக இருக்கிறார். குறிப்பாகத் தேர்தல் முடிவுகள் வந்த பின்பு இவருடைய கணிப்பு மிகவும் முக்கியமானதாக உள்ளது.
இந்தியப் பங்குச் சந்தை புதிய உச்சத்தைத் தொட வாய்ப்புள்ளது என்று பில்லியனர் முதலீட்டாளரான மார்க் மொபியஸ் தொடர்ந்து நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மார்க் மொபியஸ் அளித்த பேட்டியில், சென்செக்ஸ் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1 லட்சம் புள்ளிகளைத் தொடும் என்ற தனது முந்தைய கணிப்பைப் பற்றி கேட்டபோது, மொபியஸ் தனது நிலைப்பாட்டைத் தேர்தல் முடிவுகள் வந்த பின்பு மீண்டும் உறுதிப்படுத்தினார்.
சந்தையில் அவ்வப்போது சரிவுகள் இருந்தாலும், மொத்தமாகப் பார்க்கும்போது இந்தியச் சந்தை வளர்ச்சி போக்கில் தான் உள்ளது என கூறினார் மார்க் மொபியஸ். மேலும், இந்தியாவின் அபரிமிதமான வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, இந்த மைல்கல்லை முன்னதாகவே எட்டப்படலாம் என்றும் மார்க் மொபியஸ் கூறியது இந்திய முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
தற்போது பங்குச்சந்தையில் நீடித்து வரும் ஏற்ற இறக்கம் என்பது அதன் பிரம்மாண்ட வளர்ச்சி போக்கில் (bull run) ஒரு தற்காலிக இடைவெளி மட்டுமே தவிர, முடிவு இல்லை என்று மொபியஸ் உறுதியாக நம்பிக்கை அளித்துள்ளார். இவருடைய கருத்து இந்தியச் சந்தையில் முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது.
பொதுவாக, ஒரு நாட்டின் பொருளாதாரம் தற்போது இந்தியா வளர்ச்சி அடைந்து வருவது போல் 7% விகிதத்தில் வளர்ந்தால், சந்தை மற்றும் நல்ல லாபம் ஈட்டும் நிறுவனங்களின் பங்குகள் இரட்டிப்பாக அதாவது 14-15% வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்தக் கொள்கையின் அடிப்படையில், அடுத்த பத்தாண்டுகளில் சென்செக்ஸ், நிஃப்டி குறியீடு நிலையான வேகத்தில் தொடர்ந்து உயரும் என்று அவர் கணித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது ஆட்சி அமைப்பதில் பெரும் தடுமாற்றம் இருக்கும் வேளையில் சில துறைகள் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படும் என்று மார்க் மொபியஸ் கூறினார். எலக்ட்ரானிக்ஸ் கருவிகள், செமிகண்டக்டர், மென்பொருள் துறை ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தொடர்ந்து வளர்ச்சி அடைய கூடியவை என தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications