மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை அடுத்து தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. இது தங்க பத்திர திட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.
நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு தங்க பத்திர வெளியீட்டை குறைப்பதற்கு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின் படி இடைக்கால பட்ஜெட்டில் தங்க பத்திரம் மூலம் 29,638 கோடி ரூபாயை திரட்ட அரசு திட்டமிட்டிருந்தது ஆனால் அது தற்போது 18,500 கோடி ரூபாய் என குறைத்திருப்பதாக தெரிகிறது.
நடப்பு நிதியாண்டில் இதுவரை தங்க பத்திரம் வெளியிட போகும் தேதி குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. சில செய்தி தளங்கள் அரசு தங்க பத்திர திட்டத்தையே கைவிடலாம் என கூறுகின்றன. சில தளங்கள் அரசு கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில் குறைந்த எண்ணிக்கையிலான தங்க பத்திரங்களை வெளியிடலாம் என கூறுகின்றன. இதற்கு தங்கத்தின் இறக்குமதி வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைத்தது காரணமாக சொல்லப்படுகிறது. இதனால் தங்கம் விலை குறைந்து மக்கள் மீண்டும் தங்க நகைகளை நோக்கி திரும்பியுள்ளனர்.

தங்கத்தின் விலை குறைந்திருப்பது தங்க பத்திரங்களில் அரசு நிர்ணயம் செய்யும் தங்கத்தின் கிராமின் விலையும் குறையும் என ஆனந்த் ரதி தரகு நிறுவனத்தை சேர்ந்த மூத்த ஆய்வாளர் நவீன் மாத்தூர் தெரிவிக்கிறார். ஏனெனில் தேசிய பங்கு சந்தையில் தங்க பத்திரத்திற்கான ஒரு யூனிட் என்பது 2.6 சதவீதம் குறைந்து இருப்பதை சுட்டிக்காட்டுகிறார். இந்நிலையில் தங்க பத்திர வெளியீடு குறித்து அரசு எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் இருப்பது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
ஏனெனில் 2016 -17 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தங்க பத்திரங்கள் அனைத்தும் நடப்பு ஆண்டில் முதிர்வு பெறுகின்றன. 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பு நிதியாண்டில் தங்கத்தின் மதிப்பு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. எனவே அரசு இதற்கு கூடுதலான தொகையை செலுத்த வேண்டி இருக்கிறது. இதனாலே அரசு தங்க பத்திர வெளியீட்டை குறைத்து பின்னர் கைவிட முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இதனிடையே தங்கத்தின் இறக்குமதி வரி குறைக்கப்பட்டு தங்கம் விலை குறைந்துள்ளது. எனவே வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதிர்வு பெற இருக்கும் தங்க பத்திரங்களில் லாபம் குறைந்துவிடும். பட்ஜெட்டிற்கு பிறகு தங்கம் விலை குறைந்ததால் 10% வரை தங்க பத்திரங்களில் முதலீடு செய்பவர்களுக்கு லாப விகிதம் குறையும் என சொல்லப்படுகிறது. அரசு தங்க பத்திரங்கள் வெளியிடவில்லை இருந்தாலும் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் இவற்றை வாங்கி வர்த்தகத்தில் ஈடுபடலாம் என சொல்லப்படுகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications