மும்பை: மார்ச் மாதத்தில் ஸ்மால் கேப் பங்குகளில் ஏற்பட்ட திருத்தத்தின் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவை கண்டன. இதனால் முதலீட்டாளர்களும் பெரும் இழப்பை சந்தித்தனர். அந்த இரண்டு வார கால சரிவுக்குப் பிறகு இந்திய பங்குச் சந்தையானது படிப்படியாக உயர்ந்தது. அண்மையில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 75,000 புள்ளிகளை தாண்டியது, அதேபோல தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 22,500 புள்ளிகளை தாண்டி வர்த்தகமானது.
இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் இருப்பதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் சில குறிப்பிட்ட காரணிகளை முதலீட்டாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். முக்கியமாக கடந்த நிதியாண்டு முடிந்து புதிய நிதியாண்டு தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் நிறுவனங்களின் வருமானம் உள்ளிட்ட முடிவுகள் வெளியாக கூடும் என்பதால் நிறுவனங்களின் பங்கு மதிப்பீட்டில் குறிப்பிட்ட மாற்றங்கள் வரக்கூடும் என ஆஸ்க் பிரைவேட் நிறுவனத்தின் மூத்த மேலாளர் சோம்நாத் முகர்ஜி தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக முதலீட்டாளர்கள் சற்று எச்சரிக்கையுடன் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும் என கூறுகிறார்.

ஸ்கைமெட் நிறுவனம் இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை வழக்கமானதாகவே இருக்கும் என கணிப்பு வெளியிட்டு இருக்கிறது . இருப்பினும் இந்தியாவின் கிராம புற பொருளாதாரம் என்பது பருவமழையை சார்ந்து இருக்கிறது என்பதால் பருவமழையில் ஏற்படும் சின்ன மாற்றங்கள் கூட பங்குச்சந்தையிலும் எதிரொலிக்கும் என செபியில் பதிவு செய்யப்பட்ட முதலீட்டு ஆலோசகரான கௌரவ் கோயல் தெரிவித்துள்ளார். மழை பற்றாக்குறை இருந்தால் நமது வேளாண்மை பாதிக்கும், இதன் மூலம் நமது உணவுப்பொருள் உற்பத்தி மற்றும் சப்ளை ஆகியவற்றில் சிக்கல்கள் வரலாம் எனக் கூறியுள்ளார்.
அடுத்ததாக உலோகங்கள் மற்றும் கச்சா எண்ணெய் ஆகியவற்றின் விலை அதிகரித்து வருவதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்கின்றனர் பங்குச்சந்தை முதலீட்டு நிபுணர்கள். ஜியோ பொலிடிகல் பிரச்சனைகள் அதிகரித்தால் அது கச்சா எண்ணெய் மற்றும் உலோகங்களின் விலையில் மாற்றங்களை கொண்டு வரும் இது பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இந்தியாவில் இந்த பொருட்களின் இறக்குமதியின் இது தாக்கத்தை ஏற்படுத்தினால் பொருளாதாரமும் பாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கின்றனர்.
அதேபோல அமெரிக்காவில் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தல் மற்றும் அமெரிக்க வங்கிகளுக்கான வட்டி விகித மாற்றங்கள் ஆகியவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
இந்தியாவில் அமைய இருக்கும் புதிய அரசு மற்றும் தேர்தல் முடிவுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பங்குச்சந்தையில் ஏற்படப் போகும் மாற்றங்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இஸ்ரேல் பாலஸ்தீன மற்றும் உக்ரைன் ரஷ்யா இடையிலான சண்டை என்பது சர்வதேச அளவில் முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்திருப்பதாகவும் இங்கே தாக்குதல்கள் அதிகரிக்கும் பட்சத்தில் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் பிரச்சனைகள் அதிகரிக்கும் போது கச்சா எண்ணெய் விலை உயர்வது மற்றும் பொருட்கள் விநியோக சங்கிலியில் பாதிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தி பங்குச்சந்தையில் வீழ்ச்சியை கொண்டு வர காரணமாக அமைந்து விடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.


Click it and Unblock the Notifications