இந்தியாவின் மிகப் பெரிய செல்வந்தர்கள், சமூகத்திற்காக வழங்கும் நன்கொடைகள் வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளன. எடெல்கிவ் ஹுருன் இந்தியா நன்கொடையாளர்கள் பட்டியல் 2025-இன் படி, நாட்டில் உள்ள பெரிய நன்கொடையாளர்கள் அனைவரும் சேர்ந்து 2025ஆம் ஆண்டில் மொத்தமாக ரூ. 10,380 கோடி பங்களித்துள்ளனர். இது கடந்த 3 ஆண்டுகளில் 85% அதிகமாகும். இதன் மூலம், இந்தியாவில் பெரிய அளவில் தொண்டு செய்யும் மனப்பான்மை பெருகி வருவது உறுதியாகியுள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டுப் பட்டியலில் முதல் முறையாக நன்கொடை அளித்த 12 பேர் உட்பட மொத்தம் 191 நன்கொடையாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
தொடர்ந்து முதலிடத்தில் ஷிவ் நாடார்: எச்.சி.எல். நிறுவனத்தின் நிறுவனர் ஷிவ் நாடார் மற்றும் அவரது குடும்பத்தினர், கடந்த 5 ஆண்டுகளில் நான்காவது முறையாக மிகவும் தாராள மனதுடன் நன்கொடை அளித்தோருக்கான பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துள்ளனர். 2025ஆம் ஆண்டில் மட்டும் இவர் ரூ. 2,708 கோடி நன்கொடையாக அளித்துள்ளார். இது நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ. 7.4 கோடி ஆகும். இந்த நிதி பெரும்பாலும் கல்வி, கலை மற்றும் கலாச்சார மேம்பாட்டிற்காக 'ஷிவ் நாடார் ஃபவுண்டேஷன்' மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

முதல் 10 இடங்களில் உள்ள நன்கொடையாளர்கள் மட்டும் மொத்தப் பங்களிப்பான ரூ. 10,380 கோடியில் பாதிக்கும் மேல், அதாவது ரூ. 5,834 கோடி பங்களித்துள்ளனர்.
முதல் 5 இடங்களில் யார் யார்..?: முகேஷ் அம்பானி மற்றும் குடும்பத்தினர் : ரூ. 626 கோடி நன்கொடையுடன் இரண்டாம் இடத்தில் உள்ளனர். (சுகாதாரம், கல்வி மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது).
பஜாஜ் குடும்பத்தினர் : ரூ. 446 கோடி நன்கொடையுடன் மூன்றாம் இடத்தில் நீடிக்கின்றனர். (கிராமப்புற மேம்பாட்டிற்கு முக்கியத்துவம்).
குமார் மங்கலம் பிர்லா மற்றும் குடும்பத்தினர் : ரூ. 440 கோடி நன்கொடையுடன் நான்காம் இடத்தில் உள்ளனர்.
கௌதம் அதானி மற்றும் குடும்பத்தினர்: ரூ. 386 கோடி நன்கொடையுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளனர்.
முதல் 10 இடங்களில் இடம்பிடித்தவர்களில், ரோஹினி நிலேகனி இந்த ஆண்டு மிகவும் தாராளமான பெண் நன்கொடையாளராக உள்ளார். இவர் ரூ. 204 கோடி பங்களித்துள்ளார்.
ஆண்டுக்கு ரூ. 100 கோடிக்கு மேல் நன்கொடை அளிப்பவர்களின் எண்ணிக்கை கடந்த 2018-ல் இரண்டாக இருந்தது, தற்போது 2025-ல் 18 பேராக உயர்ந்துள்ளது. ரூ. 50 கோடிக்கு மேல் நன்கொடை அளிப்பவர்கள் 33 பேர், ரூ. 20 கோடிக்கு மேல் அளிப்பவர்கள் 70 பேர் ஆவர்.
நன்கொடை அளிக்கும் துறைகளில் கல்வி தொடர்ந்து முதன்மையானதாக இருக்கிறது. 107 நன்கொடையாளர்கள் கல்விக்காக மட்டும் ரூ. 4,166 கோடி அளித்துள்ளனர். தொழில் துறையைப் பொறுத்தவரை, மருந்து தயாரிப்புத் துறையினரே (Pharma) அதிக நன்கொடையாளர்களைக் (16%) கொண்டுள்ளனர்.
நாட்டிலேயே அதிக நன்கொடையாளர்கள் வசிக்கும் நகரமாக மும்பை (28%) முதலிடத்தில் உள்ளது. டெல்லி (17%) மற்றும் பெங்களூரு (8%) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. சொந்த முயற்சியால் செல்வந்தர்களாகி நன்கொடை அளிப்பவர்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications