சர்வதேச அளவில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து ஏற்றத்திலேயே இருந்து வருகிறது. இருந்தாலும் தற்போது பலரது கவனமும் தங்கத்திற்கு மாற்றாக வெள்ளியின் பக்கம் திரும்பி இருக்கிறது. இதன் காரணமாக சர்வதேச சந்தையிலும் உள்நாட்டு சந்தையிலும் வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருக்கிறது.
ஜூன் 5-ம் தேதி நிலவரப்படி இந்தியாவில் எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் ஜூலை 4ஆம் தேதிக்கான சில்வர் ஃபியூச்சர்ஸின் ஒரு கிலோ வெள்ளியின் மதிப்பு 1,04,947 ரூபாய் என உயர்ந்திருக்கிறது. இந்த வார தொடக்கத்திலிருந்து இந்திய சந்தையில் வெள்ளியின் விலை தொடர்ந்து ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல்தான் வர்த்தகமாகி வருகிறது என இந்த துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு முன்பு மார்ச் 27ஆம் தேதி இந்தியாவில் எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் ஒரு கிலோ வெள்ளியின் விலை 1,01,313 ரூபாய் என வர்த்தகமானது. பின்னர் ஏப்ரல் நான்காம் தேதி எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ஒரு கிலோ 87, 620 ரூபாய் என சரிவை கண்டது. ஆனால் இந்த சரிவிக்கு பிறகு தொடர்ந்து வெள்ளியின் விலை வளர்ச்சியில் தான் இருக்கிறது என ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள தரவு தெரிவிக்கிறது.
ஜூன் 4ஆம் தேதியான புதன்கிழமை எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் ஒரு கிலோ வெள்ளியின் விலை 1,01,530 ரூபாய் என இருந்தது. அதுவே வியாழக்கிழமை அன்று 1,01,700 ரூபாய் என வர்த்தகமாக தொடங்கியது. நாள் வர்த்தகத்தில் சில்வர் ஃபியூச்சர்ஸ் விலை 1,04,947 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியதாக என்டிடிவி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது. கடந்த இரண்டு மாதங்களில் பலமுறை வெள்ளியின் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் என்ற அளவை கடந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச அளவில் வெள்ளிக்கான தேவை அதிகரித்து வருவதே இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. பல்வேறு நாடுகளும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சார்ந்த தொழில்நுட்பங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவதால் இது சார்ந்த மின்னணு சாதனங்கள் ,சோலார் பேனல்கள், மின்சார வாகனங்களில் எல்லாம் வெள்ளி ஒரு முக்கியமான பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் தொழிற்சாலை ரீதியாக இதற்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது உலக அளவில் வெள்ளியின் விலை உயர்வதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
அமெரிக்காவில் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை என்பது 34.70 டாலர்களாக இருக்கிறது. அமெரிக்க பொருளாதார மந்த நிலை, சர்வதேச அளவில் அதிகரித்து வரும் பதட்டம், டாலரின் மதிப்பு சரிந்து வருவது, தொழில் துறையில் வெள்ளிக்கான டிமான்ட் அதிகரித்திருப்பது ஆகியவை காரணமாக வெள்ளியின் விலை தொடர்ந்து வளர்ச்சியில் தான் இருக்கும் என கேடியா அட்வைஸரி நிறுவனத்தில் மூத்த ஆய்வாளராக இருக்கும் அமித் குப்தா என்டிடிவிக்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு கிலோ வெள்ளியின் விலை 1,30,000 ரூபாய் என்ற மதிப்பை எட்டுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.


Click it and Unblock the Notifications