சென்னை: விலை மதிப்பு மிக்க உலோகமாக தங்கம் மற்றும் வெள்ளியை கருதுகிறோம். இருந்தாலும் இரண்டையும் ஒப்பிடும் போது தங்கத்திற்கு சற்றே மதிப்பும் மரியாதையும் அதிகம். ஆனால் கூடிய விரைவில் தங்கத்தின் இடத்தை வெள்ளி பிடிக்கப் போகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
தற்போதைய சூழலில் வெள்ளி ஒரு கிராமின் விலை 95 ரூபாய், தங்கம் ஒரு கிராமின் விலை 6825 ரூபாய் என்ற அளவில் இருக்கிறது. வெள்ளியின் விலை தங்கத்தின் விலையை விட பல மடங்கு குறைவாக தான் இருக்கிறது. ஆனால் வரும் நாட்களில் இதன் மதிப்பு அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. இதற்கு நவீன தொழில்நுட்பத்தில் வெள்ளியின் தேவை அதிகரித்திருப்பதே காரணம்.

நவீன மின்னணு கருவிகள், சோலார் பேனல்கள் மற்றும் நீர் சுத்திகரிப்பு அமைப்புகள் உள்ளிட்டவற்றில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்து இருக்கிறது. இதனால் சர்வதேச அளவில் வெள்ளிக்கான தேவையும் உயர்ந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். சில்வர் இன்ஸ்டிட்யூட் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் 2033 ஆம் ஆண்டிற்குள் சர்வதேச அளவில் வெள்ளிக்கான தொழிற்சாலை ரீதியிலான தேவை 46 சதவீதம் அளவிற்கு உயரும். அதே வேளையில் தற்போது கையிருப்பு நிற்கும் வெள்ளியின் அளவு குறைவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
தற்போது பூமியில் வெள்ளி மற்றும் தங்கத்தின் இருப்பு குறித்து தெரிந்து கொள்ளலாம் தற்போது சுமார் 50,000 டன்கள் தங்கம் இருப்பு இருக்கிறது என வைத்துக் கொண்டால் வெள்ளியின் இருப்பு சுமாராக 5,30,000 டன்கள் ஆகும். தங்கத்தை விட வெள்ளியின் இருப்பு 10 மடங்கு அதிகம். அதே வேளையில் தொழிற்சாலை ரீதியாக தங்கத்தை விட வெள்ளிக்கான தேவையும் அதிகரித்து இருக்கிறது. இப்படி வெள்ளிக்கான தேவை அதிகரிப்பு மற்றும் வெள்ளியை தோண்டி எடுக்கும் அளவு குறைவாக இருப்பது ஆகிய இரண்டையும் ஒப்பீடு செய்யும் போது வெள்ளியின் விலை அடுத்து வரக்கூடிய ஆண்டுகளில் கணிசமான அளவு அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.
மின்னணு சாதனங்கள் தயாரிப்பு, செயற்கைக்கோள் மற்றும் ராக்கெட் உள்ளிட்ட விண்வெளி சார்ந்த தொழில்துறைகளில் வெள்ளி அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மொத்த வெள்ளி உற்பத்தியில் 20% ஆபரணங்கள் மற்றும் பாத்திரங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது எனில் மீதமுள்ள 80 சதவிகிதம் தொழில்துறைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. மின்னணு சாதனங்களில் உள்ள காப்பர்களுக்கு மேல் வெள்ளி மூலம் பூசப்படுவதால் அவை எளிதில் பழுதாவது தடுக்கப்படுகிறது என்பதால் அதிகமாக வெள்ளியை பயன்படுத்துகிறார்களாம்.
சர்வதேச அளவில் மின்னணு சாதனங்களின் பயன்பாடு அதிகரிப்பு, அதனை தயாரிக்க தேவையான பொருட்களில் வெள்ளி முக்கியபங்கு வகிப்பது, வெள்ளியை தோண்டி எடுக்கும் அளவு குறைவாக இருப்பது ஆகிய காரணங்களை கொண்டு பார்த்தால் எதிர்காலம் வெள்ளிக்கானதாக இருக்கும் என கூறப்படுகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications